சபரிமலை சன்னிதானத்தில் புதிய மருத்துவமனை: மத்திய அரசு திட்டம் திரும்பி செல்லும் நிலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2017 12:03
சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவீன மருத்துவமனை கட்டும் மத்திய அரசின் திட்டம் மாநில அரசின் பாராமையால் திருப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.சபரிமலை சன்னிதானத்தில் பெரிய நடைப்பந்தலின் முன்பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய கட்டடத்தில் இது செயல்படுகிறது. போதுமான இட வசதி இல்லாததால் முக்கிய சம்பவங்களின் போது நோயாளிகளை படுக்க வைக்க கூட இடம் இல்லை. கடந்த ஆண்டு மண்டல பூஜைக்கு முந்தைய நாள் நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இடம் இல்லாமல் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். இதனால் சன்னிதானத்தில் போதுமான இடம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய ஆரோக்கிய மிஷன் திட்டத்தின் கீழ் இங்கு நவீன ஆஸ்பத்திரி கட்ட ஏழு கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய கட்டடத்தை இடித்து மாற்ற பொதுப்பணித்துறை அனுமதி வழங்காததால் பணி தொடங்க முடியாத நிலை காணப்படுகிறது. இன்னும் 2 மாதத்துக்குள் முடிவு எடுக்கப்படாத பட்சத்தில் பணம் மீண்டும் மத்திய அரசுக்கே சென்று விடும். இதனால் சீசன் காலத்தில் பக்தர்களின் சிரமம் தொடரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.