பதிவு செய்த நாள்
13
மார்
2017
12:03
சேலம்: சேலம் மாவட்டத்தில், மாசி மாத திருவிழா பல்வேறு கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. லம், பள்ளப்பட்டி மாரியம்மன் கோவிலில், அதிகாலை, 4:00 மணியளவில், ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை, பக்தர்கள் பலி கொடுத்தனர். மாரியம்மனுக்கு, மதியம், 12:00 மணியளவில், 25 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சக்தி கரகம், அக்னி கரகம், மாவிளக்கு மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. * அழகாபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, காலை, ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து, ஆடு, கோழிகள் பலியிட்டு, சுவாமியை வழிபட்டனர். மாலையில், அலகு குத்தியும், அக்னி கரகம் எடுத்தும், ஏராளமான பக்தர்கள் ஊர்வலம் வந்தனர்.
* கொண்டலாம்பட்டி அருகே, நெய்க்காரப்பட்டி மாரியம்மன், காளியம்மன் மற்றும் படைவெட்டியம்மன் கோவில் திருவிழாவில், மாலை, 3:00 மணிக்கு, காளியம்மனுக்கு பொங்கல் வைத்து, 4:30 மணிக்கு, பக்தர்கள் தீ மிதித்தனர். தொடர்ந்து, மாரியம்மனுக்கு கூழ் படைத்து, பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
* ஆட்டையாம்பட்டி, வைதீஸ்வரன் தையல்நாயகி குலதெய்வ பங்காளிகள் சார்பில், பெரியாண்டிச்சிக்கும் புடவைக்காரி அம்மனுக்கும் முப்பூஜை விழா நடந்தது. மாலை, வேலநத்தத்தில் உள்ள சுவாமி வீட்டில் கூடிய, 1,000த்துக்கும் மேற்பட்ட பங்காளிகள் கொண்டு வந்த வேட்டி, சேலை மற்றும் பூஜை பொருட்களை வைத்து படையலிட்டனர். அவற்றை, அங்கிருந்து மேள, தாளம் முழங்க, கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவில் முன், ஏராளமான பக்தர்கள், முடி காணிக்கை அளித்தனர். பெரியாண்டிச்சி, புடவைக்காரி அம்மன் சிலைகளுக்கு, புதுப்புடவைகள் சார்த்தி, கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
* பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், காலை மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் நடந்தது. அதில், ஆடு, கோழி பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்தனர். ஈச்ச மரம் பிள்ளையார் கோவிலில் இருந்து, பக்தர்கள் அலகு குத்தி, ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். சிறப்பு அலங்காரத்தில், மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை காளியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு, ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்தனர். மதியம், 2:00 மணிக்கு மேல், மாவிளக்கு எடுத்தலில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, காளியம்மன் வேடமிட்டு, உற்சாகமாக நடனமாடி வந்த பக்தர், பார்வையாளர்களை அசத்தினார்.
* கொளத்துார், லக்கம்பட்டி பஞ்சாயத்து, பெரியதண்டா அருகே, கத்திரிமலை வனப்பகுதியில் உள்ள ஒசோடப்பன் கோவில் பண்டிகையில், 70க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆட்டு இறைச்சியை எடுத்து செல்லக்கூடாது என்பதால், அங்கேயே சமைத்து, பக்தர்களுக்கு உணவுடன் பரிமாறப்பட்டது.
* மேட்டூர், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், பெரிய பத்ர காளியம்மன் - மாரியம்மன் கோவில் பண்டிகை முன்னிட்டு, சிறுவர்கள், பெண்கள் உள்பட, 200க்கும் மேற்பட்டோர், தீ மிதித்தனர். மாலை, 6:00 மணியளவில், பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பூங்கரகம், அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலம் வந்தனர்.