பதிவு செய்த நாள்
17
மார்
2017
11:03
பழநி: கர்நாடக மாநிலம் தேசிய பாறை ஆராய்ச்சி மையத்தின் கோலார் தங்கவயல் விஞ்ஞானிகள், பழநி மலைக்கோயில் வின்ச் மற்றும் ரோப்காரில் நேற்று ஆய்வு செய்தனர். பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வரும் வகையில் நாள்தோறும் மூன்று வின்ச்- மற்றும் ‘ரோப்கார்’ இயக்கப்படுகின்றன. இவற்றில் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக பராமரிப்பு பணிகள் நிபுணர்கள் மூலம் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாண்டு பராமரிப்பு பணியில் தேசிய பாறை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி ராஜன்பாபு, விஞ்ஞானிகள் உதயகுமார், ராய்ஸ்டன், நிபுணர்கள் விவேக், நவீன், ராஜா, டோபியஸ் ஆகியோர் வின்ச் ஸ்டேஷனில் கம்பி வடம், மோட்டார், ஷாப்ட் உருளையை ஆய்வு செய்தனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், செயற்பொறியாளர் ரவீந்திரன் உடனிருந்தனர்.
இன்று ரோப்காரில் பாதுகாப்பான பயணம், இயந்திரங்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். விஞ்ஞானி ராஜன்பாபு கூறுகையில்,“தேசிய பாறை ஆராய்ச்சி மையம் சார்பில் மக்கள் பயன்பாட்டில் உள்ள சாதனங்களை பாதுகாப்பு, இயந்திரங்களின் தரம் குறித்து ஆய்வு செய்கிறோம். கடந்தாண்டுவின்சில் ஆய்வு செய்து கம்பி வடத்தில் விரிசல் இருப்பதை கண்டுபிடித்தோம், புதிதாக மாற்றியுள்ளனர். தற்போது பயன்படுத்தப்படும் சாப்ட், உருளை, கம்பிவடம் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்துச் சென்று, நவீன கருவிகள் மூலம் ஆய்வகத்தில் பரிசோதனை செய்வோம். ஏதேனும் குறைதெரிந்தால் அதை மாற்றும்படி கோயில் நிர்வாகத்திடம் தெரிவிப்போம்” என்றார்.