பதிவு செய்த நாள்
23
மார்
2017
03:03
பாஞ்சால நாட்டை மன்னன் வீரசேனன் ஆட்சிபுரிந்து வந்தான். அவனது இரு மனைவியருள் இளையவள், மூத்த ராணியிடம் மிகுந்த பொறாமை கொண்டு, அவளை நாட்டை விட்டு வெளியேற்றத் திட்டம் தீட்டினாள். அந்த நேரத்தில் ஆண் மகனை பிரசவித்தாள் பட்டமகிஷி. விதிவசமாய் அக்குழந்தை பெருநோயுடன் பிறந்தது. இளையராணி அதையே காரணமாக்கி, இத்தகைய குழந்தைகளால் தேசமே அழிந்துவிடும் என அரசரை நம்ப வைத்து, ராணியையும் குழந்தையையும் நாட்டைவிட்டு வெளியேறினாள். மூத்த அரசி, சாஸ்தா மீது மிகுந்த பக்தி கொண்டவள். எந்த நிலையிலும் சாஸ்தா மீதான நம்பிக்கையைக் கைவிடவில்லை. காசிராஜனின் நாட்டையடைந்து, தான் அரசி என்பதை மறைத்து, ஒரு வீட்டில் பணிப்பெண்ணாய் வேலை பார்த்து வந்தாள். குழந்தையும் நோயுடனேயே வளர்ந்து வந்தது. மகன் ஜெயதேவனுடன் பல இன்னல்களை அனுபவித்தாள்.
ஒரு முறை அந்த ஊருக்கு வந்த மகரிஷி ஒருவர், அரசியின் மீது கருணை கொண்டார். சாஸ்தா மீது அவள் வைத்திருந்த பக்தியை அறிந்தார். சாஸ்தாவுக்கு உகந்த உத்திர நட்சத்திர விரதத்தின் பெருமையை அவளுக்கு எடுத்துரைத்தார். ஹரிஹரசுதன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியின் ஜன்ம நட்சத்திரமான உத்திர நட்சத்திர நாளில் துவங்கி, ஒரு முழுவருடம் முழுமையாய் இவ்விரதம் கடைப்பிடித்தால் நினைத்த வேண்டுதல்கள் கைகூடும். பீமன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பலனாய் பகாசுரனை அழித்தான். அர்ஜுனன் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து துரியோதனாதிகளை வென்றான் எனக் கூற, அரசியும் அந்த விரதம் இருந்தாள். அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் ஜெயதேவனின் பெருநோய் குணமாகி, அவன் அழகனாய் பிரகாசித்தான். சாஸ்தாவின் அருளால் நடந்த இந்த அதிசயத்தை காசிராஜன் கேள்விப்பட்டு, ஜெயதேவனுக்கு தன் மகளை மணமுடித்துத்தர விரும்பினான். ஜெயதேவன் பாஞ்சால இளவரசன் எனத் தெரிந்து கொண்டு வீரசேனனை சந்தித்தான். அதுவரை வேறு பிள்ளைப் பேறில்லாமல் தவித்துக்கொண்டிருந்த மன்னன், தன் தவறை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டு உரிய நாளில் ஜெயதேவனுக்கு இளவரசியை மணமுடித்தான். இவ்விரதம் அனுஷ்டித்ததால் மூத்த அரசி நல்ல பலன்களைப் பெற்றாள். இந்தக் கலியுகத்தில் ஐயப்பனை நினைத்து ஆண்கள் விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்வது போல், பெண்கள் அவரவர் வீட்டில் இருந்து ஐயப்பனை நினைத்து இந்த விரதத்தினைக் கடைப்பிடித்தால், குழந்தைகள் நலம் சிறக்கும்; குடும்பத்தில் நன்மைகள் பல உண்டாகும்.