கி.பி. 1260- ம் ஆண்டில் கட்டப்பட்ட திருக்கதாலீஸ்வரர் கோயிலில் தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. தமிழ்நாட்டில் புராதனக் கோயில்களில் இப்படிக் கல்வெட்டுகள் இருப்பது சகஜம். ஆனால், இந்தக் கோயில் இருப்பது சீனாவில், ஆச்சரியமாக இருக்கிறதா? குப்லாய்கான் என்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணைப்படி இக்கோயில் கட்டப்பட்டது என்பதைச் சொல்லும் கல்வெட்டுதான் அது. அதுமட்டுமல்ல, தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டின் கடைசி வரி, சீன எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் காண்டன் எனும் நகருக்கு வடக்கில் ஷுவான்சவு என்னும் துறைமுக நகர் இருக்கிறது. பண்டைக் காலத்தில் தமிழ் வணிகர்கள் வியாபார நிமித்தம் அடிக்கடி இங்கே வந்து சென்றுள்ளனர்.
இப்பகுதியை ஆண்ட குப்லாய்கான் சக்கரவர்த்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, இங்கே வந்திருந்த தமிழ் வணிகர்கள் சிவன்கோயில் கட்டினால் உடல் நலம் சீராகும் என்று சொன்ன யோசனையினை ஏற்று, அந்த மன்னனால் ஷுவான் சவுநகரில் அமைக்கப்பட்டது ஓர் சிவன்கோயில். குப்லாய்கான், உலகையே நடுங்கச் செய்த செங்கிஸ்கானின் பேரன். அக்காலத்தில் சீன அரசர்களுக்கும், பாண்டிய மன்னர்களுக்கும் இடையே நல்லுறவு இருந்ததாகச் சொல்கிறது வரலாறு. குப்லாய்கானுடன் நட்புறவு பாராட்டிய பாண்டிய மன்னன், குலசேகர பாண்டியன்.
கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இறைவனை, திருக்கதாலீஸ்வரன் உதயநாயனார் என்ற திருப்பெயரால் அழைத்தார்கள். கோயில் அமைந்த இடம் திருக்காதலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த கோயிலில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணைய நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும். சகயுகத்தில் சித்ரா பவுர்ணமி நாளில் இந்தக் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.