பதிவு செய்த நாள்
24
மார்
2017
12:03
நாமக்கல்: நாமக்கல்லுக்கு வருகை தந்த, சிருங்கேரி சாரதாபீடம் மடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், இரண்டாம் நாளாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்
கர்நாடகா மாநிலம், சிருங்கேரி சாரதா பீடம் மடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் மற்றும் ஸ்ரீ விதுசேகர சுவாமிகள் ஆகியோர், நேற்று முன்தினம் மாலை நாமக்கல் நகருக்கு வருகை தந்தனர். நகர எல்லையான, சேலம் சாலை, முருகன் கோவில் அருகில், அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நாமக்கல், கோட்டை நரசிம்ம சன்னதி தெருவில் உள்ள முல்லை மஹாலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இரவு நடந்த சந்திரமவுலீஸ்வர பூஜையில் பங்கேற்றனர். நேற்று காலை, சுவாமிகள் இருவரும், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். பின், முல்லை மஹாலில் பாதபூஜை, பிச்சாவந்தனம் நடந்தது. இதையடுத்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். தொடர்ந்து, வாசவி மஹாலில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ விதுசேகர சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மாலை, 4:00 மணியளவில் சுவாமிகள் இருவரும், திண்டுக்கல்லுக்கு புறப்பட்டுச் சென்றனர். இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், சுவாமிகளை தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.