பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
01:04
ஊட்டி: ஊட்டியில் நடந்த தவக்கால பரிகார பவனியில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ‘ஈஸ்டர்’ பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் தவக்காலம் கடை பிடிக்கப்பபடுகிறது. தவக்காலத்தின், 5வது ஞாயிற்று கிழமையான நேற்று, ஊட்டி கத்தோலிக்க திருச்சபை சார்பில், ஏசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளின் நினைவாக, சிலுவையை சுமந்தும், பக்தி பாடல்கள் மற்றும் ஜெபங்களுடன் தவக்கால பரிகார பவனி நடந்தது. ஊட்டி இருதய ஆண்டவர் தேவாலயத்தில் காலை, 8:30 மணிக்கு புறப்பட்ட பரிகார பவனியை, பங்கு தந்தை ஜான் ஜோசப் துவக்கி வைத்தார். இந்த பவனி, மருத்துவமனை சாலை, கூட்ஷெட், மேரீஸ்ஹில், ரோகிணி, காந்தல் வழியாக குருசடி திருத்தலத்தை அடைந்தது. அங்கு மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை, திருத்தல அதிபர் பீட்டர் தலைமையில் திருத்தல வளர்ச்சி பணி குழுவினர் செய்திருந்தனர்.