பதிவு செய்த நாள்
03
ஏப்
2017
01:04
கிணத்துக்கடவு: முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி முத்துமலை முருகன் கோவில் கும்பாபிசேக விழா கடந்த மாதம் 30ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்த புனித நீர் குடங்கள் மேளதாளங்கள் முழங்க கோபுர பகுதிக்கு எடுத்துச்சென்றனர். அங்கு, பேரூராதீன இளையபட்டம் மருதாசல அடிகள், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில், கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனுார், வீரப்பகவுண்டனுார், சொக்கனுார், மூலக்கடை கேரளா மாநிலத்திற்குட்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், பக்தர்கள் மீது கும்பாபிஷேக தீர்த்தம் தெளிக்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில், இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். மலை அடிவாரத்தில், முத்துக்கவுண்டனுார் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.