பதிவு செய்த நாள்
04
ஏப்
2017
12:04
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக, இந்து மக்கள் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த் வடேநேரேவிடம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் விஜயராஜ், அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமியை தரிசனம் செய்ய, புரோக்கர்கள், பணம் பெற்றுக் கொண்டு அழைத்து செல்கின்றனர். பணம் இருந்தால் மட்டுமே, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதை தடுக்க கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா நடவடிக்கை எடுக்கவில்லை. கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, நகரில் முக்கிய பிரமுகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பவுர்ணமி நாட்களில், அடையாளம் தெரியாத வெளியூர் நபர்கள், அன்னதான நன்கொடை, காணிக்கை வசூல் செய்துவிட்டு தலைமறைவாகி விடுகின்றனர். குற்றச்செயல்களை கண்காணிக்க, மாட வீதியை சுற்றி, சிசிடிவி கேமரா அமைத்து, போலீசார் கண்காணிக்க வேண்டும். கோவிலில் விற்கப்படும் பிரசாதம், அதிக விலைக்கு விற்படுதோடு, குறைவான எடை அளவில் வழங்கப்படுகிறது. முறைகேட்டில் ஈடுபடும் இணை ஆணையர் ஹரிப்பிரியாவை, உடனடியாக இடமாற்றம் செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.