தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1026வது ஆண்டு சதயவிழா, இன்று காலை 9.01 மணிக்கு இறைவணக்கத்துடன் துவங்கியது. தொடர்ந்து எம். மகாதேவன், பாஸ்கரன் குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திருமுறை அரங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. சதய விழாவினை முன்னிட்டு தஞ்சை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சதயவிழாக்குழு தலைவர் தங்கமுத்து கூறியதாவது:மாமன்னன் ராஜராஜசோழனின் ஆயிரத்து 26வது முடிசூட்டு விழா அவர் பிறந்த நாளான ஐப்பசி சதய நட்சத்திரம் தஞ்சை பெரியகோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. காலை ஒன்பது மணிக்கு இறை வணக்கத்துடன் விழா தொடங்குகிறது. காலை பத்து மணிக்கு மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், கலெக்டர் பாஸ்கரன், டி.ஐ.ஜி., ரவிக்குமார், பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் கலந்து கொள்ளும் மேடை நிகழ்ச்சி நடக்கிறது.காலை 11 மணிக்கு மாமன்னனின் மாட்சிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. மாலை மூன்று மணிக்கு ராஜாங்கம், செந்தில்குமார் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி, மாலை 3.30 மணிக்கு களிமேடு அப்பர் அவையினர் திருமுறை இசைத்தல் மற்றும் இன்னிசை பக்தி பாடல்கள், திருமுறை இன்னிசை அரங்கும், மாலை 5.30 மணிக்கு 25 நாதஸ்வரம் மற்றும் 25 தவில் இசைக்கலைஞர்களின் இசை சங்கம நிகழ்ச்சி நடக்கிறது.