பதிவு செய்த நாள்
07
ஏப்
2017
12:04
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் தீமிதி திருவிழாவில், நேற்று, பீமசேனன், பகாசூரனுக்கு கும்பம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தெருக்கூத்து நாடகமும் துவங்கியது. ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினசரி பகலில் மகாபாரத சொற்பொழிவு நிகழ்த்தப்படுகிறது. நேற்று இரவு முதல், தெருக்கூத்து நாடகம் துவங்கி நடந்து வருகிறது. முன்னதாக, நேற்று மாலை, பகாசூரனுக்கு பீமசேனன் கும்பம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பீமசேனன் வீதிவீதியாக வலம் வந்தார். அவருக்கு, வீடுதோறும் பக்தர்கள் கும்பம் படைத்தனர். கொழுக்கட்டை, சாதம் என, வண்டி நிறைய குவிந்திருந்த கும்பத்துடன், பீமசேனன், இரவு 8:00 மணிக்கு கோவில் வளாகத்தை வந்தடைந்தார். வரும் 16ம் தேதி காலை, துரியோதனன் படுகளமும், அன்று மாலை அக்னி வசந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான அக்னி பிரவேசமும் நடக்கிறது. திருவிழாவை ஒட்டி, திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.