பதிவு செய்த நாள்
08
ஏப்
2017
11:04
ஆர்.கே.பேட்டை: பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர பெருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, புதிய ரிஷப வாகனம், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பொதட்டூர்பேட்டை கிராமத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில். இங்கு, மூன்று நாள் பங்குனி உத்திர பெருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, உழவார மன்றத்தினரின் தேவாரம், திருப்புகழ் ஓதப்பட்டது. மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை தொடர் சொற் பொழிவு நிகழ்த்தப்பட்டது. இன்று, அப்பர் இறைப்பணி மன்றத்தினரின் பக்தி இன்னிசையும், சொற்பொழிவும் தொடர்கின்றன. நாளை காலை, 11:30 மணிக்கு அகத்தீஸ்வரர், அமிர்தவல்லி தாயாருக்கு திருக்கல்யாணம், பக்தர்களால் நடத்தி வைக்கப்படுகிறது. இரவு, 8:00 மணிக்கு, புதிய ரிஷப வாகனத்தில், எறிபக்தநாயனார் உழவார மன்ற இசைக்குழுவின், சிவபூதகண வாத்தியங்கள் முழங்க, உற்சவர் பெருமான் வீதியுலா வருகிறார்.