பதிவு செய்த நாள்
08
ஏப்
2017
01:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவையொட்டி, கொடியேற்றமும் தொடர்ந்து பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் துவங்கியது.உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் வரும், 13ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, நோன்பு சாட்டப்பட்டு, கம்பம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று கோவில் வளாகத்தில், கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பரம்பரை அறங்காவலர், இந்து அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
பூவோடு துவக்கம்: கோவிலில் கொடியேற்றப்பட்டதையடுத்து, விரதமிருக்கும் பக்தர்கள், பூவோடு எடுக்க துவங்கியுள்ளனர். வரும், 11ம் தேதி இரவு, 10:00 மணி வரை, பூவோடு எடுத்து வழிபாடு செய்யலாம். திருவிழாவையொட்டி, அம்மன் திருவீதியுலா நாள்தோறும் இரவு நடக்கிறது. நேற்று காமதேனு வாகனத்தில், அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் திரு வீதியுலா நடந்தது. வரும், 12ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கும், மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. வரும், 13ம் தேதி, காலை 6:00 மணிக்கு மேல், 7:10 மணிக்குள், மகாசக்தி மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், அன்று மாலை, 4:15 மணிக்கு, தேரோட்டமும் நடக்கிறது. குங்குமார்ச்சனை, சூர்ணோத்ஸவம், அம்பாள் பரிவேட்டைக்கு எழுந்தருளல், வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் 14ம் தேதி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.