புதுச்சேரி: மகாவீரரின் 2616வது ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பகவான் மகாவீரர் அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை உலகிற்கு கற்பித்தார். மகாவீரரின் 2616வது ஜெயந்தி விழா விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் ஜெயின் சமூகத்தினர் நேற்று மகாவீர் ஜெயந்தியை கொண்டாடி மகிழ்ந்தனர். ஊர்வலம்: 45 அடி ரோடு ஜெயின் கோவிலில் துவங்கிய பேரணியை, முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து துவக்கிவைத்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி அண்ணாசாலை பார்ஸ்வநாதன் கோவிலில் நிறைவடைந்தது. மதியம் 2 மணிக்கு தீபாராதனை நடந்தது. பேரணியில் பங்கேற்ற ஜெயின் சமூகத்தினர் மகாவீரர் போதித்த நெறிகளை மக்கள் அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால் வாழ்வில் அமைதியும், இன்பமும் என்றும் தழைத்தோங்கும் என வலியுறுத்தினர். பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இறைச்சி கடைகள் மூடல்: மகாவீரர் ஜெயந்தியையொட்டி இறைச்சி கடைகள், மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. கலால்துறை பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.