பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
05:04
காளிப்பட்டி: கந்தசாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கோலாகலமாக நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சேலம் மாவட்டம், காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவர் கந்தசாமிக்கு, புனிததீர்த்தங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, தங்கக்கவசம் சாத்தப்பட்டது. அதேபோல், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் உற்சவர் கந்தசாமிக்கும், தங்கக்கவசம் சாத்தப்பட்டது. விழாவையொட்டி,
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, பால், இளநீர் உள்பட பல்வேறு காவடிகளை சுமந்துவந்து, தங்கள் வேண்டுதல்களை
நிறைவேற்றினர். இரவு, 8:00 மணிக்கு, சப்பரத்தில், கந்தசாமி எழுந்தருளி, கோவிலில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், பூலாவரி, கல்யாண சுப்பிரமணியர்,
ஆட்டையாம்பட்டி கை.புதூர் ராஜகணபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்: சேலம், ஊத்துமலை, பாலசுப்ரமணியர் கோவிலில், அதிகாலை, 4:30
மணியளவில், பால், புஷ்பம், பன்னீர் காவடி சகிதமாக, 108 பால்குடம் ஊர்வலம் எடுத்துவந்து, மூலவர் பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், கலசாபிஷேகம், சங்காபிஷேகம் செய்து, பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
7:00 மணிமுதல், பக்தர்கள், குடும்பம் சகிதமாக வரிசையில் காத்திருந்து, முருகப்பெருமானை தரிசித்தனர். இரவு, 8:00 மணியளவில், உற்சவமூர்த்திகள், மாட வீதிகளில் உலா வந்தார்.
மொத்தம், 50 ஆயிரம் பக்தர்கள் முருகனை தரிசித்தனர்.