பதிவு செய்த நாள்
10
ஏப்
2017
05:04
குருத்தோலை ஞாயிறு பவனி: ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
சேலம் குருத்தோலை ஞாயிறு பவனியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள், மார்ச், 1ல் தவக்காலத்தை துவக்கினர். அதில், குருத்தோலை ஞாயிறு பண்டிகை, நேற்று அனுசரிக்கப்பட்டது. சேலம் குழந்தை ஏசு பேராலயம் உள்பட மாநகர், புறநகரில் உள்ள, 83 தேவாலயங்களில், நேற்று காலை பிரார்த்தனை நடந்தது. அதில்
பங்கேற்றவர்கள், அந்தந்த தேவாலய ஆயர், போதகர் தலைமையில், குருத்தோலையால் செய்த சிலுவையை கையில் ஏந்தி, பவனியாகச் சென்றனர். தேவாலயங்களில் இருந்து புறப்பட்ட பவனி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. மதியம், இரண்டாவது பிரார்த்தனை நடந்தது. அதில், திரளான கிறிஸ்தவர்கள் ஜெபித்தனர்.
* சேலம், புனித சவேரியார் இளங்குருமட பங்குத்தந்தை மைக்கேல்செல்வம், புனித செல்வநாயகி ஆலய பங்கு தந்தை பீட்டர் ஜான்பால் தலைமையில், இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து, பவனி புறப்பட்டு, வெள்ளாண்டிவலசில் உள்ள புனித
செல்வநாயகி ஆலயத்தை அடைந்தனர். அதில், 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
* ஏற்காட்டில், திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் துவங்கிய பவனி, ஜெரீனாக்காடு, ஏற்காடு பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, காந்தி பூங்கா வழியாக, மீண்டும் ஆலயத்தில் முடிந்தது. கிறிஸ்தவ
பாதிரியார்கள் இன்னாசிமுத்து, ஜோஷி பிரதாப், அமல்ராஜ் தலைமையில் நடந்த பவனியில், 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், குருத்தோலை ஏந்தி, கிறிஸ்தவப் பாடல்களை
பாடிச்சென்றனர்.