மயிலம்: மயிலம் முருகர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை மலையடிவாரத்தில் உள்ள அக்னி குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதையொட்டி, மலைக்கோவிலிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமியை பக்தர்கள் மேளதாளத்துடன் குளத்திற்கு அழைத்து வந்தனர். காலை 11:00 மணியளவில், அபிஷேகம், வழிபாடு, மகா தீபாரதனை நடந்தது. பின்னர் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.தொடர்ந்து, பவுர்ணமியை முன்னிட்டு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தருக்கு 1008 அர்ச்சனைகள், மகா தீபாரதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு புதுச்சேரி கண்மணி கிரியேஷன்ஸ் சார்பில் அன்னை சக்தியும், அண்ணாமலையாரும் என்ற ஆன்மீக நாடகம், சென்னை ரமணிசவுந்தர்ராஜன் குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது. இரவு 8:30 மணிக்கு உற்சவர் கிரிவலகாட்சி நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.