நாமகிரிப்பேட்டை: மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவிலில் தீமிதி விழா நடந்தது. நாமகிரிப்பேட்டை அடுத்து, ஆத்தூர் மெயின் ரோட்டில், மெட்டாலா கணவாய் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கோவில் தீமிதி விழா ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இந்தாண்டு தீமிதி விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு, நாமகிரிப்பேட்டையில் ஆஞ்சநேயர் பந்தசேர்வை திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, நாமகிரிப்பேட்டையில் சிறப்பு பூஜையுடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு கன்னிமார் ஊற்றிலிருந்து சுவாமிக்கு சக்தி அழைத்தலும், சுவாமி நீராடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் பூசாரியும், இரண்டாவதாக பக்தர்கள் இறங்கினர்.