பதிவு செய்த நாள்
11
ஏப்
2017
05:04
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையாசுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பரிவேட்டை திருவிழா நடந்தது.
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் முத்தையா, ராயப்பா, பூமாலையப்பர், பச்சையம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கோவில் உள்ளது. முருகனின் அவதாரமாக உள்ள முத்தையா சுவாமிக்கு பங்குனி உத்திரத்தையொட்டி திருவிழா கடந்த மார்ச் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமி திருவீதியுலாவும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பரிவேட்டை திருவிழாவையொட்டி முத்தையா, ராயப்பா, பச்சையம்மன், பூமாலையப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. முத்தையாசுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பரிவேட்டைக்காக வயல்பகுதிக்கு பல்லக்கில் முத்தையாசுவாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு பக்தர்கள் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் சுவாமி கோவிலுக்கு திரும்பும் வழியில் பக்தர்கள் நாடு நலம் பெறவேண்டியும், மகப்பேறு வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் பில்லிசூனியம் அகலவும் வேண்டி வழிநெடுகிலும் பக்தர்கள் படுத்துக்கொண்டனர். முத்தையாசுவாமியின் பல்லக்கு பக்தர்கள் மீதேறி, புனிதநீர் தெளித்து கோவிலை வந்தடைந்தது. கோவில் வளாகத்தில் பல்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.