பதிவு செய்த நாள்
12
ஏப்
2017
10:04
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் நேற்று, பல ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, மார்ச், 27ல் துவங்கியது. தினமும் நித்யபடி பூஜைகள் நடந்தன. 9ம் தேதி காலை முதல், பண்ணாரி ரோட்டில் இருந்து, குண்டம் இறங்கும் இடம் வரை, நீண்ட வரிசையில், பக்தர்கள் காத்திருந்தனர்.
மருத்துவ வசதி : இவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன் தினம் இரவு, 11:00 மணிக்கு மேல் சிறப்பு பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு திருக்குளம் சென்று அம்மன் அழைத்தலும், வரம் பெறுதலும் நடந்தது.
பின், குண்டத்தின் முன், மலர் பல்லக்கில் இருந்த அம்மனுக்கும், குண்டத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்து, அதிகாலை, 3:50 மணிக்கு கோவில் பூசாரி ராஜசேகர், அம்மனை பூஜை செய்தபடி குண்டம் இறங்கினார்.தொடர்ந்து, கோவில் பூசாரிகள், ஊழியர்கள், மலர் பல்லக்கில் அம்மனுடனும், பூஜை பொருட்களுடன் குண்டம் இறங்கினர். தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். குண்டம் இறங்கியவர்கள், நேரடியாக அம்மனை தரிசனம் செய்து, கோவிலை வலம் வரும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். நேற்று மதியம், 2:00 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்கியதும், அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் குண்டம் இறங்கின.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா, முன்னாள் எம்.பி., காளியப்பன் மற்றும் குழந்தைகளுடன் பல பெண்கள், மாற்றுத் திறனாளிகள், போலீஸ்காரர்கள், வனத்துறையினர், தீயணைப்பு பிரிவினர் என பலரும், குண்டம் இறங்கினர்.அறநிலைய துறை ஆணையர் வீரசண்முகமணி, கலெக்டர் பிரபாகர், எஸ்.பி., சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தள்ளுமுள்ளு : வி.ஐ.பி., பாஸ் பெற்றவர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் என, பலரும் சென்று வர முறையான ஏற்பாடு இல்லாததால், கோவில் பிரதான வாயில், குண்டம் இறங்கும் வளாகம் உட்பட பல இடங்களில் தள்ளுமுள்ளு, போலீசாருடன் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று பகல், 12:00 மணிக்கு மாவிளக்கும், இரவு, 10:00 மணிக்கு புஷ்பரதம் - சிம்ம வாகனத்தில் உலாவும், 13ல் மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அன்னதானமும், 14 மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடும், 7:00 மணிக்கு தங்க ரதம் புறப்பாடும், 17ம் தேதி காலை, மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.