பதிவு செய்த நாள்
15
ஏப்
2017
12:04
ராமேஸ்வரம்: தமிழ் புத்தாண்டு தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர். தமிழ் புத்தாண்டு தினத்தில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை செய்ததும், பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவ சிவ என கோஷமிட்டு, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். ஏராளமான பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்ததால், 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மதியம் 12 மணிக்கு கோயில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார். கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் பலர் பங்கேற்றனர்.