மேலுார்: மேலுார் அருகே வெள்ளலுாரில் ஆண்டுதோறும் தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு, வெற்றிலை பிரி திருவிழா கொண்டாடுவர்.வெள்ளலுார் நாடு என்றழைக்கப்படும் 60 கிராமங்களில் உள்ள 11 பிரிவை சேர்ந்த 22 அம்பலக்காரர்கள் தலைமையில் கிராம மக்கள் மந்தை கருப்பண சுவாமி கோயில் மந்தையில் கூடினர். ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்களும் கிராமத்தினர் சார்பில் வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டது. வெற்றிலை வாங்கிய அம்பலக்காரர்கள் பொதுமக்களுக்கு பிரித்து கொடுத்தனர். பின் ஒவ்வொருவரும் வீட்டு பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பின்னர் வயலுக்கு சென்று உழவு பணியை துவங்கினர். இதனால் விவசாயம் செழித்து எல்லா வளமும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
மதநல்லிணக்கம்: தும்பைபட்டி கிராமத்திலும் மக்கள் சார்பில் வாங்கப்பட்ட வெற்றிலை கட்டுகள் மந்தையில் வைக்கப்பட்டது. கீழையூர், கீழவளவு உள்பட பல்வேறு கிராம மக்கள் கூடினர். பின்னர் கிராமத்து சார்பில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதன் பிறகு முஸ்லிம்கள் தலைமையில் ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்களின் பெயர் வாசிக்கப்பட்டு வெற்றிலை பிரித்து கொடுக்கப்பட்டது. இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், எல்லா வளமும் பெறவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.