பதிவு செய்த நாள்
07
நவ
2011
03:11
சிவனாரின் அம்சமான கால பைரவர், ஆணவத்தால் தலை கால் புரியாமல் ஆடிய பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார். இதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாகி, புண்ணியத் தலங்கள் பலவற்றுக்கும் சென்று வழிப்பட்டார். புனித குளத்தில் நீராடினார். பலனில்லை. இறுதியாக, காசியம்பதிக்கு வந்து, கங்கையில் நீராடி, சிவ தரிசனம் செய்த பிறகுதான், அவரின் தோஷம் நீங்கியது என்கிறது ஸ்தல புராணம். இதையெடுத்து, இங்கே கால பைரவருக்கு அழகிய ஆலயமும் உருவானது. காசியின் முக்கியப் பகுதியான மைதாகினியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர் கன்ச்சில் அமைந்துள்ளது இந்த ஆலயம். வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிக்கும் கால பைரவரை இங்கு தரிசனம் செய்யலாம். கால பைரவர் சுயம்புத் திருமேனி இவருடைய அனுமதியில்லாமல், காசியில் காற்று கூட நுழையாது; காசி மரத்து இலைகள் கூட அசையாது என்றொரு சொல் வழக்கு உண்டு. இவரை வணங்கினால், பஞ்சமா பாதகங்களும் விலகிவிடும்; முக்திகிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கும் சைவ-அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன. அஷ்டமி, சதுர்த்தி மற்றும் அமாவாசை நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு. காசியில் கால பைரவர், அசிதாங்க பைரவர், பூத பைரவர், பீஷ்ண அல்லது சண்ட பைரவர், கபால பைரவர், குரோதன பைரவர், உன்மத பைரவர், ருரூ பைரவர், சம்ஹார பைரவர் மற்றும் ஆனந்த பைரவர் என பத்து விதமான பைரவர் கோயில்கள் உள்ளன. இவர்களில், காலத்துக்கு அதிபதியான கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட, எதிரிகளின் தொல்லை ஒழியும்.