புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது அம்பகரத்தூர். திருநள்ளாறு தலத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது பத்ரகாளியம்மன் கோயில். அம்பகரத்தூர். அம்பன் மற்றும் அம்பகாசுரனை அழித்து, அனைவரையும் காத்துடன், இன்றைக்கும் பத்ரகாளி எனும் திருநாமத்துடன் அருள்பாலித்துக்கொண்டு இருக்கிறாள் அம்பிகை. இங்கு அம்பாசுரனை தன் பாதங்களால் மிதித்தபடி, சூலாயுதத்தால் மார்பைப் பிளக்கும் திருவிக்கிரகத்தையும், அம்பனை மிதித்து வாளால் துண்டிக்கும் திரு விக்கிரகத்தையும் தரிசிக்கலாம். அம்மன் சன்னதிக்கு முன்னே பலிபீடமும், மகிஷ பீடமும் உள்ளன. இந்த இடத்தில் நின்று, அம்மனை வணங்கித் தொழுதால், எதிரிகள் தொல்லை ஒழியும்; துன்பங்கள் யாவும் விலகும் என்பது ஐதிகம்! அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் மட்டுமின்றி தை மாதமும் இங்கு விசேஷம்! தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமையன்று, சுமார் 2000 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை பிரமாண்டமாக நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரி விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார-ஆராதனைகள் நøபெறுகின்றன. மார்கழியிலும் இங்கு விசேஷம்தான். மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமி நாட்களில் பத்ரகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், திருமண வரம் கிடைக்கும் என்கின்றனர், பெண்கள்.