உத்தர்கண்ட் மாநிலத்திலுள்ள தேவபூமி என்றழைக்கப்படும் உத்தரகாசியில் பாகீரதி நதிக்கரையில் அழகுற அமைந்துள்ளது விஸ்வநாதர் ஆலயம். பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் திருக்கோயிலில் அரிச்சந்திர மகாராஜாவும் திருப்பணிகள் செய்துள்ளராம். பிற்காலத்தில், அந்நிய படையெடுப்பால் பெருமளவு சிதைக்கப்பட்ட ஆலயம், 1857-ல் மன்னர் சுதர்ஷன் ஷா-வின் மனைவி ராணி கானேதியின் முயற்சியால் மீண்டும் பொலிவு பெற்று, வழிபாடுகள் துவங்கியது என்பது வரலாற்று தகவல். அந்நிய படையெடுப்பின்போது, இந்தக் கோயிலின் ஞானவாவி கிணற்றில் மூலவர் லிங்கத்தை பாதுகாத்து வைத்திருந்தார்களாம். காசியில் கங்கைக் கரையில் விஸ்வநாதர் கோயில் கொண்டுருக்கிறார். அதேபோல், பாகீரதி நதிக்கரையில் ஈசன் கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலமும் காசியைப் போல் புண்ணியம் மிகுந்தது என பக்தர்கள் கூறுகிறார்கள். ஸ்கந்த புராணம் இந்தக் தலத்தில் மகிமைகளைப் போற்றுகிறது.
மூலவர் சன்னதிக்கு நேர் எதிரில் அம்பாள் சூல வடிவில் குடிகொண்டிருப்பது. இந்தக் கோயிலின் சிறப்பம்சம். செம்பினால் ஆன கீழ்ப் பாகமும் இரும்பால் ஆன மேற்புறமும் கொண்டு. சுமார் 26 ஆடி உயரம்; எட்டேமுக்கால் அடி சுற்றளவுடன் திகழ்கிறது இந்த சூலம். இதை, அன்னை துர்கா என்றும் சக்தி என்றும் பக்தி பொங்க வழிபடுகின்றனர். துர்கையாக அவதரித்த அம்பிகை, இந்தச் சூலாயுதத்தால் அசுரரை வதைத்தாள்; வதம் முடிந்ததும் சூல ரூபத்திலேயே இங்கே குடிகொண்டுவிட்டாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மார்க்கண்டேயர், ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தா, குருநானக் உட்பட மகான்கள் பலரும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றுள்ளனர். இங்குள்ள சூல வடிவிலான அம்பிகையைத் தரிசித்தால், நமது வாழ்வு வளமாகும்.