பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
12:04
பழவேற்காடு : பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயத்தில், 502ம் ஆண்டு, திருத்தேர் பவனி வருதல்திருவிழாவை முன்னிட்டு, ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, முன் ஏற்பாடுகளை செய்தனர். பழவேற்காடு, நடுவூர் மாதா குப்பம் மீனவ கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புனித மகிமை மாதா திருத்தலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், புனித வெள்ளி முடிந்து, இரண்டாவது சனிக்கிழமை, திருத்தேர் பவனி வருதல், திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆலயத்தில், 502ம் ஆண்டு திருத்தேர் பவனி வருதல் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 10 தினங்கள் நடைபெறும். இந்த திருவிழாவின் போது, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகை தருவர்.
அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை செய்து தருவதற்காக, மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் நேற்று, அங்கு ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். ஒன்றிய ஆணையர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் அங்கு பார்வையிட்டு, ஆங்காங்கே தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் அகற்றினர். மேலும், திருவிழாவிற்கு வருகை புரிபவர்களுக்கு முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிப்பது, தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்றுவது, கார்களை நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். மேற்கண்ட பணிகளுக்காக கூடுதல் பணியாளர்களை நியமித்து, திருவிழாவிற்கு வருகை புரிபவர்களுக்கு உதவிட ஆட்சியர் உத்தரவின்பேரிலும், திட்ட இயக்குனர் அறிவுறுத்தலின்பேரிலும், ஒன்றிய நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.