பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
12:04
ஓசூர்: ஓசூர் அடுத்த டி.,கொத்தப்பள்ளி தர்மராஜா சுவாமி மற்றும் வீரபத்திர சுவாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது. ஓசூர் அடுத்த டி.,கொத்தப்பள்ளி கிராமத்தில், பழமையான தர்மராஜா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா மற்றும் மஞ்சு விரட்டு விழா, கடந்த, 10 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, 14ல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தர்மராஜா சுவாமி மற்றும் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. 18 ல் திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சகரகம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று தேரோட்டம் நடந்தது. ஊர் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (ஏப்., 20) திரவுபதி அம்மன் அக்னி குண்ட பிரவேசம், பூக்கரகம், வாண வேடிக்கை, சிலம்பாட்டம் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை (ஏப். 21) காலை, 10:00 மணிக்கு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து மதியம், 2:00 மணிக்கு தர்மராஜ சுவாமிக்கு தாலாட்டு உற்சவமும் நடக்கிறது. இதேபோல், ஓசூர் அடுத்த குருபரப்பள்ளி, மராட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி ஆகிய, மூன்று கிராமங்களுக்கு நடுவே அமைந்துள்ள வீரபத்திர சுவாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 17 ல் துவங்கியது. நேற்று முன்தினம் மதியம், ஊர் பொதுமக்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு, குருபரப்பள்ளி, மராட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி ஆகிய, மூன்று கிராமங்களுக்கு சென்றனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அக்னி குண்ட பிரவேசம் நடந்தது. நேற்று பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.