திருப்பெரும் புதூர் தன்னில் திரு அவதார மெடுத்து அரும்பெரும் செயல்க ளாற்றி அளவிலா வேதக் கடலை பருகிடச் செய்த அண்ணல்! பழந்தமிழ் நாட்டி னுள்ளே இருந்திடும் வைணவ நெறியை இனித்திட செய்த வல்லோன்!
திருக்கச்சி நம்பி அன்பால் திருக்கச்சி நாதன் அருளால் உருவான அறிவுக் கடல்தான் உடையவர் என்னும் நாமம் தரித்திட்ட எம்பெரு மானார் தமிழ்மண்ணின் வேத வித்து அரிதான விஷய ஞானம் அமைந்திட்ட அருள்மொழி அரசு!
யாதவர் பிரகாச ரென்னும் யாதும் துறந்த ஞானிபால் மாதவம் செய்த பெருமான் மந்திர விளக்கங் கற்றார்! ஆதலால் யாவ ருக்கும் ஆற்றல் புரிந்த ஆண்டு சாதனை பலவும் செய்து சரித்திரம் பதிவு செய்தான்!
அற்றை நாள் காஞ்சி நகரை அரசாட்சி செய்த மன்னன் நற்றவப் புதல்வி தன்னை நரகுசூழ் பேய்தான் பிடிக்க கொற்றவன் கவலை நீங்க குருவையே விஞ்சும் சிஷ்யன் பற்றிய பேயை விரட்டி பலப்பல வித்தை செய்தான்!
திருவரங்க நாதன் புகழை தினந்தோறும் சேவித்தி ருக்கும் பெருமைசால் ஆள வந்தார் பெருமைக்குப் பெருமை சேர்க்க அருமையாய் வைணவ நெறியை அகிலத்தில் பரப்பு தற்கு இராமாநுசர் இருந்தால் போதும் இப்படி நினைக்கும் வேளை!
ஆளவந்தார் திருநாடு ஏக அவர்விரல் மூன்று மட்டும் மீளாமல் மடக்கிக் கொண்டு மெய்ப்பொருள் மறைத்துக் காட்ட மூலத்தை உரைத்த அக்கணம் அவிழந்தன விரல்கள் மூன்றும் ஞாலத்தில் உடையவர் பெயரோ நிலைத்தது பாரீர்! பாரீர்!
கோட்டியூர் நம்பி என்னும் கடலொத்த ஞானம் பெற்றோன் காட்டிய மோட்ச நெறியை கருணைகூர் இராமா நுசரோ மேட்டோடு பள்ளத் தார்க்கும் மொழிந்திட எண்ணங்கொண்டு கூட்டினார் கூட்டந் தன்னை கோபுர வாசல் பக்கம்!
உலகீரே வாரும்! வாரும் உறுதிப் பொருள்தான் ஒன்றை நலம்பெற சொல்வேன் கேளீர் நல்லதோர் மோட்சம் செல்வீர்! வலம்புரி சங்க நாதம் வழங்கிடும் ஓசை போலே சொல்லிய வார்த்தை யாலே சொர்க்கத்தின் வாசல் சென்றார்!
தான்மட்டும் வாழு கின்ற தன்னலம் மிக்க நாட்டில் நான்மட்டும் நலத்தை வேண்டேன் நானில மக்கள் யாரும் ஏன் இங்கு அனைத்து பேறும் எய்திடல் நலமே ஆகும்! வேண்டிய புரட்சித் துறவி பேதத்தின் புதிய சிறகு!
மதத்திலே புரட்சி செய்து மகானாய் வாழ்ந்த அவர்தான் சதத்தினை வாழ்நாள் கடந்தார் சகமெலாம் புகழே அடைந்தார்! புதரினை நீக்கிப் பொலிவைப் புகுத்திய வைணவத் தோன்றல்! பதமலர் பற்றி நிற்போம் பணிவோம் இராமா நுசரையே!