பதிவு செய்த நாள்
08
நவ
2011
11:11
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் தங்க தேர் செய்யப்பட்டு 3வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நேற்று இரவு காந்திமதிஅம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தங்க தேரில் பவனி வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு 2கோடி ரூபாய் செலவில் காந்திமதி உபயத் திருப்பணி மன்றம் சார்பில் தங்கத் தேர் செய்யப்பட்டது. இந்த தேர் நெல்லையப்பர் கோயிலில் ஓடி 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3 வது ஆண்டு துவங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று நெல்லையப்பர் சன்னதியில் உள்ள விநாயகர், பள்ளத்து மூல மகாலிங்கத்திற்கு வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டது. நெல்லையப்பருக்கு தங்க முலாம் பூசப்பட்ட நாக அங்கியும், காந்திமதி அம்பாளுக்கு தங்க முலாம் பூசப்பட்ட அங்கியும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனையடுத்து இரவு காந்திமதிஅம்பாள் உபயத் திருப்பணி மன்றம் சார்பில் நெல்லையப்பர் கோயில் தங்கதேரில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. தங்க தேர் நெல்லையப்பர் கோயில் வெளிப்பிரகாரத்தை வலம் வந்து நிலையத்தை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் சுவாமி சங்கரானந்தா, டாக்டர்.சிவராமகிருஷ்ணன், சொனா. வெங்கடாசலம், நெல்லை கல்சுரல் அகாடமி காசிவிஸ்வநாதன், செல்லையா, செயல் அலுவலர் கசன்காத்த பெருமாள், சென்னை சில்க்ஸ் மேலாளர் மணவாளன், தென்மண்டல பூசாரிகள் சங்க தலைவர் கார்த்திகேயன் குருக்கள், சிவகாமி ஆறுமுகம், முன்னாள் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், குணசேகரன், வெங்கட்ராமன் நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். தங்க தேர் பவனியின் போது மலேசியா செல்லப்பா, நெல்லை மணிகண்டன், மாரியப்பன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.