பதிவு செய்த நாள்
08
நவ
2011
11:11
ஈரோடு: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஈரோடு ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் மற்றும் தர்ம பிரச்சார பரிஷத் சார்பில், வரும், 13ம் தேதி மாலை 4 மணிக்கு, ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. இதுகுறித்து ஈரோடு ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் செயலாளர் உமாபதி ஈரோட்டில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஈரோடு ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் மற்றும் தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் ஈரோட்டில் வருகிற 13ம் தேதி மாலை 4 மணிக்கு ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. அதைமுன்னிட்டு, வரும் 12ம் தேதி மாலை 7 மணிக்கு கும்பமரியாதையுடன், ஈரோடு காவிரிக்கரையில் இருந்து, ஸ்ரீனிவாச பெருமாளை மேளதாளம் முழங்க, ஊர்வலமாக அழைத்து வருகின்றனர். அன்றிரவு 8 மணிக்கு பெருமாள் யூ.ஆர்.சி., பள்ளியில் எழுந்தருள்வார். வரும், 13ம் தேதி காலை 11 முதல் மாலை 3 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக ஈரோடு வ.உ.சி., பூங்கா மைதானத்துக்கு எழுந்தருள்வார். உடல் ஊனமுற்றோர், வயதானோர், காதுகேளாதோர், ஆதரவற்றோர் அல்லது கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் திருக்கல்யாணத்தை கண்டுகளிக்கவே இந்த சிறப்பு ஏற்பாடு. அன்று மாலை 5 முதல் 7 மணிக்குள்ளாக திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பக்தர்களுக்கு வழங்க 70 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி, நாளை துவங்குகிறது. மேலும் திருக்கல்யாணத்துக்காக ஏழு டன் பூக்கள் கொண்டு பல்வேறு அலங்காரம் செய்யப்படவுள்ளது. ஒன்பது இடத்தில் பச்சை பந்தல் எனப்படும் நுழைவு வாயில் மற்றும் உயர்ந்த கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது. திருமலை திருப்பதி செயல் ஆட்சி தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார். துணைச் செயலாளர் குமரேசன், குழு உறுப்பினர் கமலக்கண்ணன், இன்ஜினியர் மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.