நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லைவளாகம் இங்கே சீதாபிராட்டியார், லட்சுமணன் மற்றும் அனுமனுடன் அருள்பாலிக்கும் கோதண்டராமர் கொள்ளை அழகு. ரேகைகளும் கைகால் நகங்களும் மிகத் தத்ரூபமாகத் திகழும் பஞ்சலோகத்திலான இந்த விக்கிரகத் திருமேனி சிற்ப அற்புதம்தான்!
தில்லைவளாகம் செல்வோர் இந்த ராமமூர்த்தியைத் தரிசித்து வரம்பெற்று வாருங்கள். அத்துடன், வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து அருள்பெற வேண்டிய ராமன் திருத்தலங்கள் ஏழு உள்ளன. ஸப்த ராம திருத்தலங்கள் எனச் சிறப்பிக்கப்படும் அந்தத் தலங்கள்: அயோத்தி, திருப்புல்லாணி, சீர்காழி, திருவெள்ளியங்குடி, திருஎவ்வுள், திருப்புள்ளம்பூதங்குடி, திருப்புட்குழி, இவற்றில் அயோத்தியைத் தவிர, மற்றவை நம் தமிழகத்திலேயே இருப்பது, நாம் செய்த பெரும்பாக்கியம்!