பதிவு செய்த நாள்
03
மே
2017
12:05
ஈரோடு: ராமானுஜர், ஆயிரமாவது ஆண்டு விழா உற்சவம், பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடந்தது. வைணவ ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜர், ஆயிரமாவது அவதாரத் திருநாள், நாடு முழுவதும் வைணவ தலங்களில், வெகு விமர்சையாக நடந்து வருகிறது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், கடந்த பத்து நாட்களாக, ராமானுஜர் மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் மூலம் அபிஷேகம், திருமஞ்சனம் அலங்காரம், பஜனை, பாராயணம், உபன்யாசம், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்தன. ராமானுஜரின் அவதார நட்சத்திர திருநாளான, நேற்று முன்தினம் இரவு, ராமானுஜர் உற்சவர் திருவீதியுலா நடந்தது. உற்சவர் திருமேனியை பட்டாச்சரியார்கள் பல்லக்கில் சுமந்தபடி, முன்னே செல்ல, ராமானுஜர் தாசர்கள் மற்றும் எம்பெருமாள் நித்ய கைங்கரிய அமைப்பினர் சார்பில், ஆறடி உயர ராமானுஜர் சொரூபம், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், எழுந்தருள செய்து, வீதியுலாவாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தின் முன், கேரளத்து செண்டை மேளம் முழங்கவும், பெண்கள் கோலாட்டம் ஆடி, பஜனை பாடல்களை பாடிச்சென்றனர். வழிநெடுகிலும் நின்ற மக்கள், ராமானுஜர் உற்சவரை தரிசனம் செய்தனர்