பதிவு செய்த நாள்
04
மே
2017
11:05
திருவண்ணாமலை: கத்திரி வெயிலை முன்னிட்டு, இன்று (மே 4) முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில், தாராபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பாண்டில் கடும் வெயில் வாட்டி வருகிறது. கத்திரிவெயில் துவங்கும் முன்பே, மாவட்டத்தில் அதிகபட்சமாக, 43.33 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்தது. கத்திரி வெயில் துவங்கினால், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கத்திரி வெயிலை முன்னிட்டு, இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக, அக்னி தோஷ நிவர்த்தியாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 4) முதல், வரும், 28 வரை, தாராபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி, தினமும் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, மூலவர் கருவறையில், தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட புனித நீர் இறைவனின் திருமேனியில் துளித்துளியாய் சிந்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாராபிஷேகம் நடந்தாலும், வழக்கமான வழிபாடுகளிலும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பதிலும் எவ்வித மாற்றமும் இல்லை. கத்திரி வெயிலின் நிறைவில், சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது.