பதிவு செய்த நாள்
04
மே
2017
02:05
திருத்தணி : நாகாலம்மன் கோவிலில், நேற்று நடந்த மண்டலாபிஷேக நிறைவு விழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் கிராமத்தில், புதிதாக நாகாலம்மன் கோவில் கட்டி, கடந்த மார்ச் மாதம், 16ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேக விழா, 48 நாட்கள் நடந்தன.
சிறப்பு யாகம்: நேற்று, மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், யாகசாலையில், ஐந்து கலசங்கள் அமைத்து சிறப்பு யாகம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மஞ்சள் அபிஷேகம்: பின், கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலையில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இன்று, மழை வேண்டி, மூலவர் அம்மனுக்கு, 108 குடம் மஞ்சள் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. விழாவில், திருத்தணி, தலையாறிதாங்கல், தாடூர், இ.என்.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.