பதிவு செய்த நாள்
06
மே
2017
11:05
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகரை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்கும் விழா, வைகை ஆற்றில் மே 10 காலை 6:15 மணிக்கு மேல் காலை 7:00 மணிக்குள் வைகை ஆற்றில் நடக்கிறது. சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் பொருட்டும், ’சுந்தரத்தோளுடையான்’ என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்த சுந்தரத்தோள்களுக்கு ஆண்டு தோறும் ’சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாள் சாற்றிக்கொண்ட திருமாலையை ஏற்றுக் கொள்ளும் பொருட்டும், அழகர்கோவில் சுந்தரராஜப்
பெருமாள் ’கள்ளர் திருக்கோலத்துடன்’ மதுரைக்கு எழுந்தருளுவார்.
வைகை ஆற்றில் எழுந்தருள வரும் கள்ளழகரை, வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்க தயாராகி வருகிறார். ’வெள்ளிக்குதிரை’ ’தங்கக்குதிரை’மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலின் உபகோயிலான வீரராகவப் பெருமாள் கோயில் தெற்குமாசி வீதி எழுத்தாணிக்காரத் தெருவில் உள்ளது. கள்ளழகரை வரவேற்பதற்காக, இக்கோயில் உற்சவர் வீரராகவப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத்தில் மே 10 இரவு 2:30 மணிக்கு சர்வ அலங்காரத்தில் புறப்பாடாகி தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, யானைக்கல், கல்பாலம் வழியாக லாலாசத்திரம் வந்தடைவார். அங்கு தீபாராதனைகள் முடிந்து அதிகாலை 5:30 மணிக்கு வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதிக்கு சென்றடைவார்.காலை 6:15 மணிக்கு மேல் காலை 7:00 மணிக்குள் தங்கக்குதிரையில் ஆடி, அசைந்து வரும் கள்ளழகரை, வெள்ளிக்குதிரையில் எதிர்கொள்ளும் வீரராகவப்பெருமாள் எதிரே சென்று மூன்று முறை ’வையாழி’ (வரவேற்பு) செய்வார். கள்ளழகருக்கும், வீரராகவப் பெருமாளுக்கும் மாலை, பரிவட்டம் சாத்துபடி நடக்கும். ஏற்பாடுகளை கூடலழகர் பெருமாள் கோயில் உதவி கமிஷனர் அனிதா, கண்காணிப்பாளர் சிவசுந்தரேசன், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.