தினமும் ஜெபம் செய்யும் ஒருவர் ஆண்டவரிடம் தன்னை நல்லவர் போல் காட்டிக்கொண்டு ஜெபம் செய்தார். ஒருநாள், ஏழை ஒருவர் தன் மருத்துவ தேவைக்காக அவரைத்தேடி வந்தார். அவர் உதவி செய்யாததுடன், தரக்குறைவாகப் பேசி விரட்டி விட்டார். இப்படி செய்பவர்கள், ஜெபத்தின் தன்மையை அறிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். பைபிளில்,“மனுஷன் தன் ஆத்மாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப் போல் இரட்டிலும், சாம்பலிலும் படுத்துக் கொள்ளுகிறதும், எனக்கு பிரியமான உபவாச நாளாய் இருக்குமோ? இதையா உபவாசம் என்றும், கர்த்தருக்கு பிரியமான நாளென்றும் சொல்லுவாய்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தின்படி, வெறும் ஜெபங்கள் மட்டும் ஆண்டவரின் ஆசியைப் பெற உதவாது என்பது தெளிவாகிறது. இதற்கு தீர்வையும் பைபிளே சொல்கிறது. “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர் களை விடுதலையாக்கி விடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடுக்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும் அல்லவோ எனக்கு (கர்த்தர்) உகந்த உபவாசம்,” என்ற வசனமே இதற்குத் தீர்வு.