பஹுசரா மாதா - சக்தியின் அவதாரமான இவள், சரண் என்னும் குலத்தில் பிறந்தவள். வடமாநிலங்களில் பிரபலமாக இருந்த இக்குலத்தினர், தேவியின் மக்கள் எனப் போற்றப்பட்டனர். ராஜபுதன அரசர்களால் பல்வேறு வளங்களையும் தானமாகப் பெற்றனர். இவர்கள் அனைவருமே தெய்வாம்சத்தைக் கொண்டவர்கள். இக் குலப் பெண்களை தேவியாகவே கண்டு வணங்கினர். அவர்களில் ஹிங்க்லால் மாதா, அவாத்மாதா, தனோட் மாதா, கர்னி மாதா, பஹுசரா மாதா, கொடியார் மாதா, மொகல் மாதா, சோனல் மாதா ஆகியோரை சரண் மஹா சக்தியின் அம்சங்களாகப் போற்றினர்.
பபால் தன்தேதா என்பவரின் மகள் பஹுசரா மாதா. இவள் தன் சகோதரிகளுடன் கூண்டு வண்டியில் பயணித்தாள். அப்போது பபியா என்ற கொள்ளையன் அந்த வண்டியைத் தாக்கினான். சரண் இனத்தவர் பயணிக்கும் வாகனங்களைத் தாக்குவது பெருங்குற்றம். சரண் இனத்தவரின் ஒரு சொட்டு ரத்தம் பூமியில் விழுந்தாலும் அது வெறுக்கத்தக்க விஷயம். பபியா தங்கள் வண்டியைத் தாக்குவதை அறிந்ததும் பஹுசராவும் அவள் சகோதரிகளும் தங்களை நெருப்பிலிட்டுக் கொள்ள முடிவு செய்து, தங்கள் மார்பகங்களையும் கத்தியால் வெட்டினர். பப்ரியாவுக்கு உடனே பஹுசரா மாதாவின் சாபம் கிடைத்து, அவன் ஆண்மையற்றவன் ஆனான்! பின்னர், பபியா ஒரு பெண்ணைப் போல் புடைவை அணிந்து ஆடிப்பாடி, பஹுசரா மாதாவைத் துதித்து வணங்கியதும் சாபம் நீங்கியது. அன்று முதல் இப்போது வரை இந்த பஹுசரா மாதா திருநங்கையர், திருநம்பியரின் குலதெய்வமாகப் போற்றப்படுகிறாள்.