Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதாநதியில் பக்தர்களின் ... வெண்குதிரையில் சோழவந்தான் ஆற்றில் எழுந்தருளினார் அழகர் வெண்குதிரையில் சோழவந்தான் ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்கக்குதிரை... பச்சைப்பட்டு அழகர் அம்புட்டு அழகு!
எழுத்தின் அளவு:
தங்கக்குதிரை... பச்சைப்பட்டு அழகர் அம்புட்டு அழகு!

பதிவு செய்த நாள்

11 மே
2017
12:05

மதுரை: மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, பச்சை பட்டுடுத்திய கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில், கடலென திரண்ட பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க... வைகை ஆற்றில் நேற்று காலை 6:20 மணிக்கு எழுந்தருளினார். கள்ளழகர் ஆண்டு தோறும், சித்ரா பவுர்ணமியன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் பொருட்டும், சுந்தரத்தோளுடையான் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்த சுந்தரத் தோள்களுக்கு, ஆண்டு தோறும் ஆண்டாள் சாற்றிக்கொண்ட திருமாலையை ஏற்றுக்கொள்ளும் பொருட்டும், சுந்தரராஜப் பெருமாள் கள்ளர் திருக்கோலத்துடன் மதுரைக்கு எழுந்தருள்வார். வைகை ஆற்றில், கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்வதற்காக, அழகர் மலையில் இருந்து மே 8 ல் மாலை புறப்பட்டார்.

எதிர்சேவை:  மூன்று மாவடியில், நேற்று முன்தினம் எதிர்சேவை நடந்தது. பின் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமாகி இரவு 12:00 மணிக்கு பச்சைப்பட்டுடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இரவு 2:30 மணிக்கு தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரம், வெட்டிவேர் சப்பரம் நிகழ்ச்சி நடந்தது. அங்கிருந்து புறப்பாடாகி திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளிய கள்ளழகர் கடலென திரண்ட பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி வைகை ஆற்றை நோக்கி ஆடி, அசைந்தபடி புறப்பட்டார்.

ஆற்றில் அழகர்:  கள்ளழகரை வரவேற்பதற்காக நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வைகை ஆறு லாலா ஸ்ரீரெங்க சத்திரம் மண்டபத்தில் தெற்குவாசல் வீரராகவப்பெருமாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி காத்திருந்தார். கள்ளழகரை குளிர்விக்கும் பொருட்டு சேவாத்தியர்கள் தண்ணீர் பீச்சியடிக்க... பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க... வைகை ஆற்றில் இறங்க கள்ளழகர் தயாரானார். கள்ளழகரை எதிர்கொண்டு வீரராகவப்பெருமாள் மூன்று முறை முன்னும் பின்னும் வையாழி (வரவேற்பு) ஆனார். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட கள்ளழகர், பக்தர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், காலை 6:20 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார்.

ஆண்டாள் மாலை:  லாலா ஸ்ரீரெங்க சத்திரம் மண்டபத்தில் இருந்த வீரராகவப்பெருமாளை, கள்ளழகர் மூன்று முறை வலம் வந்தார். பின் வீரராகவப்பெருமாள், கள்ளழகரை மூன்று முறை வலம் வந்தார். பட்டு வஸ்திரம், வெட்டி வேர், ஏலக்காய் மாலை சாத்துபடி நடந்தது. வீரராகவப்பெருமாள் சார்பில் ரவி பட்டர், கள்ளழகர் சார்பில் பாலாஜி பட்டர் ஆகியோர் தீபாராதனை சம்பிரதாயங்களை நடத்தினர். பின் இந்து சமய அறநிலைய மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் சாற்றிக்கொண்ட திருமாலையை, கள்ளழகர் ஏற்றுக்கொள்ளும் வைபவம் நடந்தது. தீபாராதனைகள் முடிந்து, காலை 7:40 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் புறப்பட்டார்.

இரவில் தசாவதாரம்: ராமராயர் மண்டபத்தில் மதியம் 12:00 மணிக்கு அங்கப்பிரதட்சணம் முடிந்து, வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலுக்கு இரவு 11:00 மணிக்கு சென்றடைந்தார். அங்கிருந்து இன்று (மே 11) காலை 9:00 மணிக்கு திருமஞ்சனமாகி, சேஷ வாகனத்தில், காலை 11:00 மணிக்கு தேனுார் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மதியம் 2:00 மணிக்கு மேல், கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அருள்கிறார். அனுமார் கோயிலில் மதியம் 3:30 மணிக்கு அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. ராமராயர் மண்டபத்தில் இரவு 12:00 மணி முதல் தசாவதாரம் நடக்கிறது. மே 12ல் காலை 6:00 மணிக்கு, மோகினி அவதாரத்துடன் பக்தி உலா நடக்கிறது.

தல்லாகுளத்தில் பூப்பல்லக்கு: ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில், இரவு 11:00 மணிக்கு திருமஞ்சனம், பூப்பல்லக்கு நடக்கிறது. இரவு 2:30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன், தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயிலில், வையாழி ஆனவுடன் அழகர் மலைக்கு புறப்படுகிறார். ஏற்பாடுகளை தக்கார் வி.ஆர்.வெங்கடாஜலம், துணை கமிஷனர் செ.மாரிமுத்து செய்து வருகின்றனர்.

மழை தருவார் கள்ளழகர்!:
கள்ளழகரை குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் வழிபடும் மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு அழகர் பெயர்சூட்டி வழிபடுவதும், மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை முன்னிட்டு ஏராளமானோர் நேற்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை கரிமேடு நித்யா கூறுகையில்,
மகன் ரோகித்திற்கு முதல் மொட்டை குல தெய்வத்திற்கு கொடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது. மழை இல்லாமல் வறட்சி நிலவுவதால் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கும் பொருட்டும் ரோகித்திற்கு இரண்டாவது மொட்டை அழகருக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றியுள்ளோம். மழை வரம் கொடுத்து மக்களை அழகர் காத்தருள்வார் என்பதில் நம்பிக்கை உள்ளது, என்றார்.

அழகரை பார்த்தாலேஅத்தனை மகிழ்ச்சி!: 
கள்ளழகரை தரிசித்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என பக்தர்கள் மகிழ்ச்சியாக கூறினர். வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை குடும்பத்துடன் தரிசித்த மகிழ்ச்சியில் தேனி டாக்டர் ஆனந்த், மனைவி ஆரத்தி கூறியதாவது: அழகர் ஆற்றில் இறங்கும் விழாவை காண, ஒவ்வொரு ஆண்டும் ஆசைப்பட்டதுண்டு. எனினும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டு அதற்கான வாய்ப்பை அழகர் ஏற்படுத்தி கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. உறவினர் ஒருவர் குடும்பத்துடன் அழைத்து வந்து, அழகரை தரிசிக்க ஏற்பாடு செய்தார். நாங்கள் மகன் சரவணனுடன் மதுரை வந்தோம். அதிகாலை 5:00 மணிக்கே ஆற்றுப்பகுதிக்கு வந்து விட்டோம். தங்கக்குதிரையில் கள்ளழகர் ஆற்றை நோக்கி வந்தபோது பூரிப்பு ஏற்பட்டது. அழகரை பார்த்தாச்சு... சந்தோஷம் வந்தாச்சு... என மன நிறைவுடன் திரும்புகிறோம், என்றார்.

தபால்தந்திநகர் குடும்ப தலைவி வித்யா, மதுரை என்றாலே மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், வைகையில் கள்ளழகர் எழுந்தருளல் தான் நினைவுக்கு வரும். நான் குழந்தையாக இருந்த காலம் முதல் எனது குழந்தைகளுடன் தற்போது கள்ளழகரை தரிசிக்கும் வரை இந்த தொன்மையான பாரம்பரிய கலாசாரத்தில் மாற்றம் எதுவும் இல்லை. இதுவே கள்ளழகர் விழாவின் பெருமைகளில் ஒன்று, என்றார்.

பெத்தானியாபுரம் கல்லுாரி மாணவி வினோதினி, உறவினர்களுடன் விழாவிற்கு வந்தேன். மனம் குளிர கள்ளழகரை தரிசித்தோம். ஆண்டு தோறும் வருவதுண்டு. தங்கக்குதிரையில் அழகரை தரிசித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இது உணர்வுபூர்வ குடும்ப விழா. சில வேண்டுதல்களை வைத்து வழிபட்டுள்ளேன். கட்டாயம் அழகர் நிறைவேற்றித்தருவார், என்றார்.

அழகர் உடையும்அழகர் ஆட்டமும்: அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பாங்கு வித்தியாசமானது. அழகர் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பணச்சுழற்சியும் ஏற்படுகிறது. அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்த அலங்கரிக்கப்பட்ட முண்டாசு தொப்பி, கால்சட்டை, துணி பிரி, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பை என தனி கெட்அப் உண்டு. இதை வேறு திருவிழாக்களில் காண இயலாது. நேர்த்திக்கடன் செலுத்திய பின் சந்தோஷத்தில் அழகர் ஆட்டம் நடக்கும். இதில் குடும்ப உறுப்பினர்களுடன் ஆடி மகிழ்வர். மதுரை டி.ஆர்.ஓ., காலனியை சேர்ந்த ஐ.டி., மாணவர் சபரி. சிறு வயதில் இருந்தே அழகருக்கு வேண்டுவதும், அது நிறைவேறுவதும் வழக்கமாக நடக்கிறது. இதற்கு நன்றி செலுத்தும் விதமாக விரதம் இருந்து அழகர் உடையில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன். இது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது, என்றார்.

சபரி தந்தை மணிகண்டன், மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என அழகர் மறைமுகமாக கூறும் வண்ணம் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளியுள்ளார். இம்முறை மழை பெய்யும். மக்கள் மனம் குளிர்வர். நேர்த்திக்கடன் மட்டுமல்லாமல் பொதுவாக அழகரை வேண்டிகொண்டால் நிச்சயம் நிறைவேறும். இந்த மகிழ்ச்சியில் அழகர் ஆட்டம் ஆடுவோரும் உண்டு, என்றார்.

அன்று அறநிலைய மண்டபம்இன்று அமைச்சர் மண்டபம்:  

* கள்ளழகரை தரிசிக்க வைகை ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே மக்கள் குவிந்தனர்.
* ஏ.வி., மேம்பாலம், வி.ஐ.பி., பாலம் ஆனது. வி.ஐ.பி.,க்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாலத்தின் பெரும்பகுதி காலியாக இருந்தது. அழகர் ஆற்றில் இறங்கிய பின் பாலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
* கல்பாலம், புதிய பாலத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
* வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் தொட்டியில் அழகர் இறங்கினார்.
* அழகர் ஆற்றில் இறங்கிய பின் இரண்டாவதாக எழுந்தருளும் திருக்கண் மண்டபம், இந்து சமய அறநிலைத்துறை பெயரில் இருப்பது வழக்கம். இம்முறை இந்து சமய அறநிலைய அமைச்சர் மண்டபம் என மாற்றப்பட்டது.
* வைகை ஆற்றில் கள்ளழகருடன் செல்பி எடுக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.
* சர்க்கரை தீபம் ஏந்தி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
* மாநகராட்சி சார்பில் துப்புரவு பணிகள் உடனுக்குடன் நடந்தன. குடிநீர் தடையின்றி கிடைத்தது.
* திண்டுக்கல் விளாஞ்சோலை, போலீஸ் உதவி கமிஷனர் குணசுந்தரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
* சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருட்டு சம்பவம் பெரிய அளவில் இல்லை.
* அழகர் வரும் வரை ஆற்றுக்குள் பக்தர்கள் விடிய, விடிய காத்திருந்தனர்.

ரங்கராட்டினம்குழந்தைகள் குஷி

கிராமங்களை மையமாக கொண்ட மதுரையில் திருவிழாவிற்கு பஞ்சமில்லை. மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, அழகர்கோவில் சித்திரை திருவிழா என இரண்டு முக்கிய பெரு விழாக்கள் சித்திரை மாதத்தில் நடக்கிறது. குழந்தைகள் பங்கேற்காத விழாக்களும் உண்டா... என்ன? ஒவ்வொரு விழாக்களிலும் குழந்தைகள், சிறுவர், சிறுமியரை குஷிபடுத்தும் சுவாரஸ்யமான விஷயங்கள் ஏராளம். இந்த வரிசையில் கள்ளழகர் விழாவிலும் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. தலா இரண்டு குழந்தைகள் வீதம் பத்து பேர் அமர்ந்து சுற்றும் ரங்கராட்டினம், குதிரை, யானை, புலி மீது சவாரி செய்யும் சுற்று ராட்டினம் என குடும்ப பட்ஜெட்டில் செலவு தொகை கையை கடிக்காத வகையில் பொழுது போக்கு சாதனங்களை வைத்து குழந்தைகளை குஷிபடுத்தினர். தவிர குல்பி ஐஸ், விதவிதமான பொம்மைகள், பெண்கள் அணியும் ஆபரணங்கள் விற்பனை ஜோராக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar