பதிவு செய்த நாள்
11
நவ
2011
10:11
மூணாறு : சபரிமலை செல்ல, வண்டி பெரியார் - சத்திரம் இடையே, பஸ்களை இயக்க இயலாது என, கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. குமுளி வழியாக, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், வண்டி பெரியார்-புல்மேடு பாதையையும் பயன்படுத்தி வந்தனர். கடந்த ஜனவரியில், புல்மேட்டில் ஏற்பட்ட விபத்தில், 102 பக்தர்கள் பலியாகினர். விபத்து குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹரிகரன் நாயர் தலைமையிலான குழு, பக்தர்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்தக் கூடாது என, அறிக்கை தாக்கல் செய்தது. கேரள ஐகோர்ட், வண்டி பெரியார்-புல்மேடு இடையே, போக்குவரத்தை தடை செய்து உத்தரவிட்டது.
மாற்றுப்பாதை: வண்டி பெரியார் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்து, ஏ.வி.டி., எஸ்டேட் வழியாக, பெரியார் மவுன்ட் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து சபரிமலை எஸ்டேட் வழியாக, சத்திரம் சென்றடையலாம். சத்திரத்தில் இருந்து வள்ளக்கடவு வழியாக, வண்டி பெரியார் வரும் வகையில், ஒரு வழிப் பாதையாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருமுறை, வாகன சோதனை ஓட்டம் நடந்தது.
அறிக்கை: "ரோடு குறுகலாகவும், கரடு முரடாகவும், செங்குத்தான வளைவுகளைக் கொண்டதாகவும் உள்ளது. சத்திரம் அருகில் உள்ள பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளது. விபத்து அபாயம் உள்ளதால், இப்பாதையில் பஸ்களை இயக்க இயலாது என, போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் வேணுகோபால், கேரள அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தனியார் வாகனங்கள் செல்ல அனுமதித்தால், போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாகச் சென்று, விபத்துகளை ஏற்படுத்தலாம் என்ற நிலையும் உள்ளது. எனவே, இப்பாதையை உடனடியாகச் சீரமைத்தால் மட்டுமே, சீசனுக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. இல்லையென்றால், பக்தர்கள் குமுளி-எரிமேலி-பம்பை வழித்தடத்தில் மட்டுமே செல்ல முடியும்.