வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோயிலில் நடந்த பூக்குழி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்.28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 9 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு ம், வீதியுலா நடந்தது. 8 ம் நாளில் பக்தர்களுக்கு காப்புக்கட்டு துவங்கியது. விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோயிலில் காப்புக்கட்டினர். 9 ம் நாளில் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் அதிகாலையில் கரகம் எடுத்து வந்தனர். உற்ஸவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோயில் முன் உள்ள மைதானத்தில் அக்னிக்குண்டம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தபடி ஊர்வலம் சென்றனர். பக்தர்கள் அவர்களுக்கு நீர்தெளித்து வரவேற்பு கொடுத்தனர். மாலையில் ஏராளமான பக்தர்கள் மனைவி, குழந்தைகளுடன் அக்கினிக்குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மனுக்கு சாந்தி பூஜைகள் நடந்தது. இரவு கரகம் கரைப்பதற்காக பக்தர்கள் அம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.