பதிவு செய்த நாள்
11
நவ
2011
11:11
எழுமலை : மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில், மனித உயிர்களை பலி வாங்கிய ஜாதி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இங்கு பிள்ளைமார் சமூகத்தினர் 500 குடும்பத்தினர், ஆதிதிராவிடர்கள் 700 குடும்பத்தினர் வசிக்கின்றனர். முத்தாலம்மன்- மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அரசமரம் யாருக்கு சொந்தம் என்பதில் இரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக தகராறு இருந்தது. இதுகுறித்து 1989, 90 ல் ஏற்பட்ட மோதல் மற்றும் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியாயினர். சுவர் இடிப்பு: 1990 ல் ஒருதரப்பினர், தெற்குத் தெருவை ஒட்டி நீளமான தடுப்புச் சுவரைக் கட்டினர். இந்த சுவரை "தீண்டாமை சுவர் எனக் கூறி, இடித்து பாதை அமைக்க மற்ற தரப்பினர் கோரினர். பின், சுவரை இடித்து மாவட்ட நிர்வாகம் பாதை அமைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிள்ளைமார்கள் பாதுகாப்பு இல்லை எனக்கூறி, குடும்பத்துடன் தாழையூத்து மலையில் தஞ்சமடைந்தனர். பின், பல முறை இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நின்றது.
சமாதான பேச்சுவார்த்தை: விஸ்வ இந்து பரிஷித் இணை அமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம், ஆவின் முன்னாள் பொது மேலாளர் ஆதிமூலம், எழுமலை நடராஜன், பா.ஜ., கல்வியாளர் அணித் துணைத் தலைவர் பொன்.கருணாநிதி இரு தரப்பையும் சந்தித்து பேசினர். எஸ்.பி., ஆஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் தினகரன் பங்கேற்றனர். இதில் இரு தரப்பினருக்கும் சமாதானம் ஏற்பட்டது. ஆதிதிராவிடர்கள் கோயிலில் வழிபடலாம் என பிள்ளைமார்கள் கூறினர். கோயிலுக்கு பட்டா வழங்கப்படும், என அதிகாரிகள் உறுதியளித்தனர். எஸ்.பி., முன்னிலையில் ஆதிதிராவிடர்கள் கோயிலுக்கு சென்றனர். அவர்களை பிள்ளைமார்கள் வரவேற்று அழைத்து சென்றனர். அங்கு பூஜாரி பூஜை செய்தார். பின்னர், ஆதிதிராவிடர்கள் தங்கள் தெருவுக்கு சென்றனர். எஸ்.பி., கூறுகையில், ""உத்தப்புரத்தில் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அங்கு அமைதி நிலவுகிறது, என்றார்.