ராமபக்தியில் சிறந்தவரான துளசிதாசர் இந்தியில் ராமாயணகாவியத்தை எழுதினார். அவர் மடாலயம் கட்டிராமபிரானை வழிபட்டு வந்தார். மக்கள் அவருக்கு தானமாக நன்கொடை அளித்தனர். இந்த பணத்தை திருடவேண்டும் என்ற நோக்கத்தில் நான்கு பேர், சாதுக்கள் போல காவியுடை அணிந்து மடத்திற்கு வந்தனர். பணத்துடன் ஓடினர். காவலர்கள் இருவர் அவர்களைக் கைது செய்து கை, கால்கள் வீங்குமளவு அடித்தனர். விஷயம் அறிந்த துளசிதாசர், கேவலம்! பணத்திற்காக ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள்? கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே! அதிருக்கட்டும்! யார் உங்களை இப்படி வீங்கும்படி அடித்தவர்கள்? என்று கேட்டார். அப்போது, ராமலட்சுமணர் இருவரும் அவர் முன் தோன்றி, தாசரே! நாங்கள் தான் காவலர்களாக வந்து திருடர்களை அடித்தோம்! என்று பதிலளித்தனர். இனிமேல் செல்வத்தை சேர்த்து வைக்காதீர்கள். அன்னதானம் செய்து வாருங்கள், என்று சொல்லி அவ்விருவரும் மறைந்தனர். அன்றுமுதல் துளசிதாசர் பணத்தை எல்லாம் தர்மத்திற்கே செலவிட ஆரம்பித்தார்.