பிரசித்தி பெற்ற திருவாரூர் திருத்தலத்தில், கமலாலயம் எனும் பெரிய திருக்குளம் உள்ளது. தேவ தீர்த்தம் எனப்படும் இது ஐந்து வேலி பரப்புடையது. கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள காசிமா நகரில் இருப்பதுபோல் 64 தீர்த்தக்கட்டங்கள் போல் இங்கேயும் இருக்கின்றன. இத்திருக்குளத்தின் சிறப்பினை தேவாரம். பெரிய புராணம் போன்ற பக்தி இலக்கியங்கள் போற்றுகின்றன. இந்த பெரிய குளத்திற்கு நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகளும், மதிற்சுவர்களும் உண்டு. திருவாரூரை நோக்கி குடவாசல் முதலிய இடங்களிலிருந்து வரும் வண்டிகள் மற்றும் பிற வாகனங்கள் கமலாலயக்குளத்தின் வடக்கு மற்றும் கிழக்குக் கரைகளின் வழியாகச் சொல்லவேண்டும். திருவாரூரில் இருந்து குடவாசல், கும்பகோணம் முதலிய இடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு மற்றும் மேற்குக் கரைகளின் வழியாகத்தான் செல்லவேண்டும். இந்த ஏற்பாடு திருவாரூரில் மாட்டு வண்டிகள் மற்றும் வாகனப்போக்குவரத்துகள் தோன்றிய நாளிலிருந்து, அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. இன்று உலகமெங்கும் நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழிப்பாதை என்ற சாலை விதி முதன்முதலில் திருவாரூரில்தான் தொடங்கப்பட்டது என்று வரலாற்றாய்வில் சொல்லப்பட்டிருக்கிறது.