மகாகணபதியின் புத்திரியான தேவி சந்தோஷி மாதா வரங்களை வழங்குவதில் அமுதசுரபியாகத் திகழ்பவள். இந்த தேவிக்கு புதுடெல்லியில் கோயில் உள்ளது. சந்தோஷி மாதா மந்திர் எனப்படும் இவள் கோயிலுக்குப் போக நினைப்பதே பாக்கியம் என்றும், அவளை தரிசிப்பது மகா பாக்கியம் என்றும் கூறுகிறார்கள். இங்கு ஒவ்வொரு நாளும் காலையில் சந்தோஷி மாதாவை பற்றிய பாடல்களை ஹார்மோனியம், தபேலா என்று பல இசைக் கருவிகளையெல்லாம் வைத்துக்கொண்டு கூட்டமாகச் சேர்ந்து பாடுகிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மாலை 6 மணி முதல் நள்ளிரவைக் கடந்து 2 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இடைவிடாமல் தேவியின் நாம ஜபம் நடக்கிறது. இப்படி அனைவரும் சேர்ந்து தொடர்ந்து பாடுவதை சவுக்கி என்று சொல்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் உப்புக்கடலையும் வெல்லமும் பிரசாதமாகத் தருகிறார்கள்.