கோவிந்தன் என்ற திருநாமம் திருமால் உகந்து ஏற்ற பத்து அவதாரங்களுக்கும் பொருந்தும். கோ என்ற வடமொழிச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றுள் ஒன்று நீர். நீரில் மீனாக (மத்ஸ்யம்) அவதரித்து வேதங்களை மீட்டதால் மத்யஸ்யாவதாரம் ஏற்ற திருமால், கோவிந்தன் எனப் பெயர் பெறுகிறார். நீரில் ஆமையாக (கூர்மம்) அவதரித்து, மந்த்ர மலையை தாங்கிப் பிடித்ததால் கூர்மரும் கோவிந்தனாகிறார். பூமி தேவி என்று பொருள்படும் கோவை அசுரனிடமிருந்து மீட்டதால் வராஹப் பெருமானும் கோவிந்தனே. கோ எனிச் சொல், மழை (வாக்பிரவாஹம்) எனவும் பொருள்படும். பிரம்மன் முதலான தேவர்களின் சொல் மழையால் துதிக்கப்பெற்றதால் நரசிம்மப்பெருமானும் கோவிந்தனாகிறார். பூமி எனப்படும் கோ வை அசுர வேந்தன் மாபலியிடம் தானமாகப் பெற்று தனதடியால் அளந்தால், வாமனரும் கோவிந்தன் என அழைக்கப் பெறுகிறார். பூலோகமெங்கும் (கோ) உலா வந்து தனது கோடரி கொண்டு அதர்மத்தை அழித்ததால் பரசுராமரும் கோவிந்தனே. கோ எனில் அஸ்த்ரங்கள் எனவும் பொருள் பெறும். அநேக விதமான அம்புகளை (அஸ்த்ரங்களை) ஸ்ரீராமபிரான் விஸ்வாமித்திர முனிவரிடமிருந்து பெற்றதால் ராமருக்கும் கோவிந்த நாமம் சாலப்பொருந்தும். கோ என்ற பூமியை தனது கலப்பையால் கவர்ந்ததால் (ஆகர்ஷனம்) பலராமரும் கோவிந்தனாகிறார். கோ எனப்படும் பசுக்களை மேய்த்துக் காத்ததால் கிருஷ்ணனும் கோவிந்தன் எனப் பெயர் பெறுகிறார். கோ என்கிற பூமியில் தருமத்தை நிலைநிறுத்த வல்ல கல்கியும் கோவிந்தன் என அழைக்கப்பெறுகிறார். எனவே கோவிந்தாய நமஹ என நாத்தழும்ப விளிப்பது, திருமாலின் பத்து அவதாரங்களையும் நினைத்து துதிப்பதற்கு ஒப்பாகும் என்பது திண்ணம்.