நாகை மாவட்டம் தென்னம்பலம் மலைமாரியம்மன் கோயில் தேருக்கான புதிய வடம் சிங்கம்புணரியில் தயாரானது. இக்கோயில் தேேராட்டத்துக்கு புதிய வடம் தயாரிக்க சிங்கம்புணரியில் உள்ள கயிறு உற்பத்தி கம்பெனிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் ஒரு வார காலமாக வடம் தயாரிக்கும் பணி நடந்தது. 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கயிறுகளைக் கொண்டு 2 பெரிய வடம் திரிக்கப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தயாரிக்கப்பட்ட வடக்கயிறுகள் தென்னம்பலம் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கயிறு ஒவ்வொன்றும் ஒரு டன் எடை கொண்டது. கயிறு உற்பத்தியாளர் நல்லதம்பி கூறியதாவது: இதுவரை தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு தேர்வடம் செய்து கொடுத்துள்ளோம். அதிகப்படியான பணியாளர்களைக் கொண்டு பக்குவமாக தயாரிப்பதால் வடம் உறுதியாக அமைகிறது, என்றார்.