பதிவு செய்த நாள்
26
மே
2017
01:05
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நேற்று, கோடை உற்சவம் துவங்கியது. மூன்று நாட்கள் வரை இந்த உற்சவம் நடைபெறுகிறது.நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான வீரராகவர் கோவிலில், நேற்று, அமாவாசையை முன்னிட்டு, மூலவர் தரிசனம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர். பின், கண்ணாடி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வீரராகவரையும் சேவித்தனர். வைகாசி மாதத்தில், இக்கோவிலில் கோடை உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று, கோடை உற்சவத்தின் முதல் நாளை முன்னிட்டு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பெருமாள் உள்புறப்பாடு இரவு நடந்தது.இன்று, கோடை உற்சவத்தின், 2வது நாளை முன்னிட்டு, பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனமும், மாலை 5:00 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பெருமாள், தாயார் உள்புறப்பாடு நடைபெறும். நாளை, 27ம் தேதி, கோடை உற்சவம் நிறைவடைகிறது.