பதிவு செய்த நாள்
26
மே
2017
03:05
ஒருமுறை, அம்பிகையின் இச்சைப்படி காலக் கணக்கை நடத்தி வரும் இந்த உலகம் அனைத்தும் பிரளயத்தில் மூழ்கிவிட்டது. கல்பம் முழுவதையும் படைத்து முடித்திருந்த பிரம்மன், அந்த கல்பம் முடியும் தறுவாயில் மிகவும் சோர்வுற்று கண் மூடினார். கல்ப முடிவில் பிரளயம் ஏற்படும் காலம் பிரம்மனுக்கு இரவாதலால். உலகெங்கும் அழிவு துவங்கியது. பகவான் விஷ்ணு, தேவியின் மாயையில் ஆழ்ந்து சேஷசயனனாக யோக நித்திரையில் ஆழ்ந்து விட்டார்.
இந்த நிலையில் விஷ்ணுவின் இரு காதுகளில் இருந்த அழுக்கின் வடிவமாக இரு உருவங்கள் தோன்றின. மது, கைடபர் எனும் இரு அரக்க சக்திகளே அவர்கள். விஷ்ணுவின் நாபியிலிருந்து கிளம்பிய ஓர் தாமரை மலரின் மேல் அமர்ந்திருந்தார் பிரம்மன். தோள்கள் தினவெடுக்க கிளம்பிய மதுகைடபர்கள் பிரம்மாவை எதிர்த்தார்கள்.
செய்வதறியாது திகைத்தார் பிரம்மா. இவர்களை அழிக்க மஹாவிஷ்ணுவால் மட்டுமே முடியும். ஆனால், அவரோ யோக நித்திரையில் அல்லவா ஆழ்ந்திருக்கிறார்? என்ன செய்ய? என்று யோசித்த நான்முகன், பராசக்தியை நோக்கி அற்புதமானதோர் ஸ்துதி செய்கிறார்.
நீயே அனைத்துக்கும் தாரகமான, பிரணவ வடிவானவள். நீயே படைக்கிறாய்; காக்கிறாய்; முடிவில் அழிக்கிறாய். அனைத்து தெய்வங்களாகவும் விளங்கி செயலாற்றுவதும் நீ என்று. அம்பிகையும் இந்தப் புது விளையாட்டில் சந்தோஷம் கொண்டு விட்டாள். பிரம்மன் துதிக்கத் துதிக்க. தேவியின் ரூபம் நான்முகனின் கண் முன்னால் விரிகிறது.
எப்படி இருக்கிறாள் அன்னை? காளீ என்றாலே காலத்தை கடந்தவள்தானே? இப்போது காலத்தையெல்லாம் கடந்து நிற்கும் பிரளய காலத்தில் அவளும் அனைத்துக்கும் மூலமான மஹாகாளியாக தோன்றினாள். மஹாபிரளயத்தையே பிரதிபலிப்பது போன்ற கருநிறம். அதிலும் ஓர் பேரொளி! பத்து திருமுகங்கள், பத்து திருக்கரங்கள், பத்து திருவடிகள் என அற்புதமானதோர் கோலத்தில் அம்பிகை ஆவிர்பவித்தாள். கேசாதி பாதம் சர்வலாங்கார பூஷிதையாய் விளங்கினாள். ஒவ்வொரு சிரத்திலும் விரிந்து படரும் கருங் கூந்தலும், ஒளிவீசும் மூன்று நயணங்களும், பளபளக்கும் தெற்றிப் பற்களும் என அவளது பத்து முகங்களும் அட்டகாசமான சிரிப்புடன் சோபை கொண்டு விளங்கின.
திசை பத்தும் பரந்து நிற்கும் பத்து திருப்பாதங்கள், பத்து கரங்கள்; அவற்றில் கத்தி, அம்பு, கதை, சூலம், சக்ரம், சங்கம், புசுண்டி, குண்டாந்தடி, வில், அறுபட்ட சிரம் என அமர்க்களமாக ஆயுதங்கள். வடிவினைக் கண்டால் பயம் தோன்றும் தாமஸஸ்வரூபமே. ஆனால், அவருக்கு அப்படி தோன்றவில்லை. தமோ குணமென்பது இருள். அக்ஞானம், சோம்பல் துன்பம், இந்த ஞான ஸ்வரூபிணியோ, அதீத முனைப்புடன் வந்த மனத்தின் சோம்பலையெல்லாம் நீக்கி, துன்பத்தை துடைத்து ஆனந்தம் தருபவளன்றோ?
பிரம்மனின் பிரார்த்தனைக்கு இரங்கிய மஹாகாளியாகிய லோகமாயை நித்ரா சக்தியாக விஷ்ணுவின் சரீரத்திலிருந்து வெளிவந்து மறைந்தாள்; விஷ்ணுவும் எழுந்தார். எங்கும் பிரளய ஜலம் சூழ்ந்திருப்பதையும். சதுர்முகன் நடுக்கம் கொண்டு நிற்பதையும் கண்டதும், ஆதிசக்தியின் லீலைகள் அனைத்தையும் உணர்ந்து கொண்டார்.
அடுத்த நொடி மஹாவிஷ்ணுவின் மனதுக்குள் ஊக்கம் பிறந்தது, அதி உக்ரமான கோபத்துடன் அரக்கர்களான மது - கைடபர்களை அழித்திடும் நோக்குடன் அவர்கள் மேல் பாய்ந்தார்.
பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் மது - கைடபருக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் யுத்தம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மஹாவிஷ்ணுவே கூட போர் செய்துகளைத்துப்போனார். ஆனால், அசுரர்கள் இருவரும் களைக்கவுமில்லை; சளைக்கவுமில்லை.
அம்பிகை மஹாமாயையாயிற்றே. பிரம்மனின் வேண்டுகோளின்படி, அந்த மஹாகாளி எனும் தாமஸிதேவீ அந்த அசுரர்களின் மூளைக்குள் புகுந்து வேலை செய்ய ஆரம்பித்தாள். மாயையில் மாட்டியவன் பேச்சு தலை கால் புரியாமல் அல்லவோ இருக்கும். அரக்கர் இருவரும் இறைவனுக்கும் மேலாக தங்களை எண்ணத் துவங்கினார்கள். விஷ்ணுவிடமே போய். நீயோ எங்களிடம் போரிட்டு களைத்து விட்டாய். உனக்கு என்ன வரம் வேண்டும். கேள்? என்றார்கள்.
வேறென்ன நான் கேட்கப்போகிறேன்? நீங்கள் என் கையால் மரணமடைய வேண்டும். என்றார் விஷ்ணு, பிரளய காலத்தில் எங்கே பார்த்தாலும் ஜலப்பிரவாஹம் மட்டுமே காணப்பட்டது. உடனே சாமர்த்தியமாக சிந்தித்த அரக்கர்கள். எங்கே பூமி ஜலத்தால் மூடப்படவில்லையோ அங்கே எங்களைகொல்லலாம் என்றொரு பதிலை சொன்னார்கள்.
மஹாவிஷ்ணு மஹாகாளியை மனத்துள் தியானித்தார். அடுத்த கணம் அவரது திவ்ய திருமேனி நெடிய திருமேனியாக வளர்ந்தது. விச்வரூபமென வளர்ந்து விளங்கிய அவரது உருவத்தில், அவரது தொடைகள் நீரையும் தாண்டி விளங்கும் காய்ந்த பூமியாக விளங்கியது. பிறகு அவர் அதிகம் தாமதிக்கவில்லை. அங்கே மதுவையும் கைடபனையும் படுக்க வைத்து தன் சக்ராயுதத்தால் சம்ஹாரம் செய்து முடித்து விட்டார்.
தேவீ மாஹாத்மீயத்திலும், முதல் பாகமாக விளங்கும் பிரதம சரித்ரத்தில் இந்தக் கதையே விரிவாகக் கூறப்படுகிறது. பிரதம சரித்ர நாயகியும் மஹாகாளியான இவளே. காலம் எனும் தத்துவத்தை கடந்து விளங்கும் நாயகியே காளி.
மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவளாக விளங்கி நின்றாலும், இந்த காளி தமோ குணம் கொண்டவளாகவே காட்சி தருவது விந்தையிலும் விந்தை. தாமஸ குணத்தினை அடியோடு வேரறுக்கும் இவள் தாமஸ குணத்தின் குறியீடென கருத்த மேனி உடையவளாக விளங்குவதும் ஓர் அழகு. விஷ்ணுவின்யோக நித்திரையாக, வைஷ்ணவீ மாயை என்று அறியப்படுபவள் இவளே. இவளை உணருவதோ, நெருங்குவதோ முப்பத்து முக்கோடி தேவர்களாலும் முடியாத காரியம். அடிபணிந்து வணங்கி நிற்போர்க்கு மட்டுமே இவள் வசமாகி வழிவிடுவாள்.
காலத்தை ஒடுக்கும் காளி, அனைத்து இடங்களிலும் வியாபித்து இருப்பவள் என்று காட்டவே பத்து முகம், கை, கால் என பத்தாக காணப்படுகிறாள். எட்டு திக்குடன் மேலும், கீழும் சேர்த்தால் பத்து. இதற்கு மேல் இடமில்லை. பக்தரின் அகவாழ்விலும், புற வாழ்விலும் உண்டாகும் இடையூறுகள் அனைத்தையும் நீக்கும் நாயகி இவள். அம்பிகையின் இந்த தாமஸ வடிவினை வேதமே ராத்ரி ஸுக்தம் என்ற மந்திரத்தின் வாயிலாக போற்றுகிறது.
அழிவற்ற அந்த தேவியானவள் முதலில் எங்கும் கீழும் மேலும் இருட்டைப் பரப்புகிறாள். (வானுலகின்) ஒளியால் அவளே இருட்டைப் போக்கவும் செய்கிறாள். கிராமத்தில் வசிக்கும் ஜனங்களுள் அனைவரும் (சிச்சக்திவடிவான) இரவு வந்ததும் அவளிடம் இன்புற்று ஒடுங்கின்றனர். கால்நடைகள் ஒடுங்குகின்றன. பக்ஷிகள் ஒடுங்குகின்றன. பருந்துகள் ஒடுங்குகின்றன. காரியார்த்தமாய் பிராயணம் செய்பவர்கள் ஒடுங்கின்றனர்.
இந்த உறக்கமும் ஒடுக்கமுமே விடியலுக்கான முதல்படி. செல்வத்தை கொடுத்து கடன் தொல்லையிலிருந்து விடுவிப்பது போல, ஞானத்தைக் கொடுத்து அஞ்ஞானக் கட்டுகளினின்றும் விடுவித்தருள்வாய்.
இவளே வேதாந்தத்தின் முடிந்த முடிவான உண்மையின் வடிவமாக விளங்கும் ஸத் ஸ்வரூபிணி.
கட்கம் சக்ர கதேஷு சாப பரிகான் சூலம் புகண்டீம் சிர:
சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்
யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ
நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்
தன் திருக்கரங்களில் கத்தி, சக்ரம், கதை, அம்பு, வில், குண்டாந்தடி, சூலம், புசுண்டி(கவண்கல்), அறு பட்ட தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தி முக்கண்கள் கொண்டு, சர்வாலங்காரங்களை பூண்டு விளங்கும் தேவியை, மதுகைடபர்களை விஷ்ணுவைக் கொண்டு அழிக்கும் பொருட்டு தாமரையில் உதித்த பிரம்மன் துதித்த அம்பிகையை, பத்து முகங்களும், பத்து கால்களும் கொண்டு நீலமணிக்கு ஒப்பான காந்தியுடன் காட்சி தரும் மஹாகாளியை சேவிக்கிறேன்.