பதிவு செய்த நாள்
26
மே
2017
04:05
பணப் பற்றாக்குறை நீங்கவும், வாங்கிய கடன் தீரவும், திரும்பவும், கடன் பெறாமல் இருக்கவும், சேமிப்பு உயரவும், தீர்க்கமான அறிவைப் பெறவும், புத்தி தெளிவு பெறவும், நல்ல ஆசிரியர் மற்றும் புத்திசாலித்தனமான குழந்தை பெறவும், மலட்டுத்தன்மை நீங்கவும், நல்ல விஷய ஞானம், ஆன்ம அறிவு பெற்றிடவும், குருவருள் திருவருள் பெற்றிடவும் கீழ்க்காணும் பரிகாரங்களை முறைப்படி செய்து பலன் பெறலாம்.
கேது பகவானுக்கும், அதிதேவதையான சித்ரகுப்தன் அல்லது விநாயகருக்கும் 27 வெற்றிலையை மாலையாகக் கட்டி அணிவிக்கவும். கேதுவுக்கு பால் மற்றும் நெய் அபிஷேகம் செய்யவும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை சேர்ந்த வஸ்திரம் அணிவிக்கவும். எருக்கம்பூ மாலையும் அணிவிக்கலாம். பால் சாதம், தயிர் சாதம் மற்றும் நவதான்ய வகைகளை வேகவைத்து சுண்டலாக செய்து படைக்கவும். நெய் தீபம் ஏற்றி வழிபடவும். மேலும், சாஷ்டாங்க நமஸ்காரம் அவசியம். இவரது பெயருக்கும், பரிகாரம் செய்பவரின் பெயர் ஜன்மராசி, நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்யவும். இயன்ற பேருக்கு அன்னதானம் வழங்கவும், இவ்வாறு தொடர்ந்து அல்லது மூன்று முறை செய்து வந்தால் கேதுவால் ஏற்பட்ட தோஷம் விலகி அருள் கிட்டும்.
இயன்றபொழுதெல்லாம் கேதுவையும் விநாயகரையும் வழிபட வேண்டும். பரிகார ஸ்தலங்கள்: கீழ்ப்பெரும்பள்ளம், திருப்பாம்புரம், காளஹஸ்தி (ஆந்திரா) மணக்குள விநாயக் (பாண்டிச்சேரி) மலைக் கோட்டை விநாயகர் (திருச்சி), பிள்ளையார்பட்டி, மதுரை முக்குருணி விநாயகர், காஞ்சிபுரம் சித்ரகுப்தன் கோயில்.