ஊத்துக்கோட்டை : அமாவாசை தினத்தை ஒட்டி, பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். ஊத்துக்கோட்டை - பெரிய பாளையம் மாநில நெடுஞ்சாலையில், எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது, அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவில். நேற்று முன் தினம் நடந்த அமாவாசை தினத்தை ஒட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.உற்சவர் அம்மன், மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, ஊஞ்சல் சேவையில் ஆழ்ந்திருந்தார். அம்மனுக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.